×

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் தலைக்காய பிரிவுக்கு டாக்டர்கள் இல்லாததால் உயிரிழப்பு அதிகரிப்பு

திருமங்கலம்:  மதுரை - கன்னியாகுமரி நான்குவழிச்சாலை, மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் திருமங்கலத்திலுள்ள அரசு மருத்துவமனையில் தலைக்காய பிரிவு சிகிச்சைக்கு டாக்டர்கள் இல்லாததால் விபத்துகளில் சிக்குவோரின் உயிரினை காக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அரசு மருத்துவமனை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. பிரவச வார்டு, பொது மருத்துவம், பல், சித்தா, ஓமியோபதி புதியதாக துவக்கப்பட்ட டயாலிசிஸ் பிரிவு உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு இங்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. தலைமை டாக்டர் உள்ளிட்ட 18 டாக்டர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், மருத்துவமனை ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

மதுரை - கன்னியாகுமரி நான்குவழிச்சாலை மற்றும் மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கும் வகையில் அமைந்துள்ள திருமங்கலம் அரசு மருத்துவமனையில் விபத்துகளில் சிக்குவோரை காக்கும் தலைக்காய சிகிச்சை பிரிவு இல்லை. விருதுநகர் ரோட்டில் மாவட்ட எல்லையில் 22 கி.மீ தூரமுள்ள ஆவல்சூரன்பட்டி வரையிலும், ராஜபாளையம் ரோட்டில் 40 கி.மீ தூரமும், 30 கி.மீ தூரமுள்ள பேரையூர் வரையிலும் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்குதான் விபத்துகளில் சிக்குவோரை சிகிச்சைக்கு கொண்டு வருகின்றனர். ஆனால் தலைக்காய சிகிச்சை பிரிவு டாக்டர் இல்லாததால், காயத்திற்கு மருந்து மற்றும் குளுக்கோஸ் ஏற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர்.

ஏற்கனவே விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவரை, காயத்திற்கு மருந்து மட்டும் தடவி மேலும் ஒரு மணி நேரம் காலதாமதமாக அனுப்பி வைக்கும் அவலநிலையால், பலரும் மதுரை செல்லும் வழியிலேயே தங்களது உயிரை இழந்து வருவது தொடர்கதையாகிறது. வாரத்திற்கு 4, 5 விபத்துகள் நடக்கும்  திருமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் தலைக்காயத்தினால் உயிரிழப்புவர்கள்தான்  அதிகம். கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இப்பிரச்னைக்கு ஒரே நிரந்த தீர்வு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சை பிரிவு தனியாக கொண்டு வருவதுதான். ஆனால் யாருமே இதனை கண்டுகொள்ளவில்லை.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மருத்துவமனைக்கு ஆய்வுக்கு வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இதுதொடர்பாக பல்வேறு சங்கங்கள், அரசியல் கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் தலைக்காய பிரிவு துவக்கப்படவில்லை. மேலும் தலைக்காய பிரிவுக்கு என கூடுதல் இட வசதிகள் மருத்துவமனையில் உள்ள போதிலும் இதுவரையில் துவக்கப்படவில்லை என்பதே பொதுமக்களின் குற்றச்சாட்டு. இதுகுறித்து திருமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் கூறுகையில், ‘‘மதுரை மாவட்டத்தில் வளரும் நகரமான திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு தினசரி 1200க்கும் மேற்பட்டவா–்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 40 கி.மீ தூர மக்களுக்கு மருத்துவசேவை அளித்து வரும் இந்த மருத்துவமனையில் தலைக்காயபிரிவு இல்லை. வாகனவிபத்துகளில் சிக்கி தலையில் காயமடைபவர்களை உரியநேரத்தில் சிகிச்சையளிக்க முடியாமல் உயிரிழப்பது வேதனையான விஷயம். தலைக்காய பிரிவு இயங்கினால் விபத்துகளில் சிக்குவோரில் பலரை காப்பாற்றியிருக்கலாம் என டாக்டர்களே கூறியுள்ளனர். எனவே  மாவட்ட நிர்வாகம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் உடனடியாக தலைக்காய சிகிச்சை பிரிவை துவக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

Tags : Thirumangalam Government Hospital ,doctors , Thirumangalam, Government Hospital, Doctors
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை