×

சென்னை நங்கநல்லூரில் அதிமுக மாஜி கவுன்சிலர் கணவர் பிடியில் ஸ்கேட்டிங் மைதானம்: கட்டாய வசூலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு

சென்னை: சென்னை நங்கநல்லூர் 100 அடி சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான ஸ்கேட்டிங் உள் விளையாட்டரங்கம் உள்ளது. இதனை ஆரம்பத்தில் மாநகராட்சி பராமரித்து வந்தது. தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு சென்னையில் உள்ள விளையாட்டு மைதானங்கள், பொது கழிப்பறைகள் அனைத்தும் ஆளும்கட்சியினரின் கட்டுப்பாட்டில் சென்றது. இதனால், கழிப்பறைகள் மூலம் மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய வருவாய் பாதிக்கப்பட்டு வருகிறது.  பல விளையாட்டு மைதானங்களை அதிமுகவினர் தன்வசப்படுத்தி, கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் மாணவர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படி, நங்கநல்லூரில் உள்ள ஸ்கேட்டிங் மைதானம் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் கணவர் கவுரிசங்கரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, அவர் நுழைவுக் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆனால், ஸ்கேட்டிங் மாணவர்கள் தங்களிடம்தான் உடைகள் வாங்க வேண்டும். கடைகளில் சென்று வாங்கக் கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த உடைகளுக்காக ரூ.5 ஆயிரம் வரை வசூலிப்பதாகவும், ஆனால் அந்த பணத்தில் அவர் மைதானத்தை முறையாக பராமரிக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த மைதான பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை தனியாரிடம் மாநகராட்சி ஒப்படைத்தது.

இதற்காக, தனியார் நிறுவனம் அறிவிப்பு பலகையை வைத்தது. ஆனால் சிலர் அந்த பலகையை உடைத்து அகற்றியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த மைதானத்தை தனியாருக்கு வழங்க முடியாது. தன்னிடம்தான் மைதானத்தின் பொறுப்பு இருக்க வேண்டும் என்று கவுரிசங்கர் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மைதானத்தை அவரிடம் இருந்து மீட்க முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இந்த மைதானத்தை மீட்டு, முறையாக பராமரிக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nanganallur ,AIADMK Magi Councilor ,Chennai , Skating ground, Nanganallur, Chennai
× RELATED சென்னையில் 18 மெட்ரோ ரயில்...