தீவிரவாதத்தின் மூலம் நடத்தும் மறைமுக போரில் கூட பாக். வெல்ல முடியாது: ராஜ்நாத் சிங் பேச்சு

புனே: ‘‘தீவிரவாதத்தின் மூலம் நடத்தும் மறைமுக போரில் கூட, பாகிஸ்தான் தனது வழக்கமான தோல்வியையே தழுவும்,’’ என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகடமியில் நேற்று நடந்த ராணுவ வீரர்கள் பயிற்சி நிறைவு விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது: இந்தியாவுக்கு எதிராக வழக்கமான போராக இருந்தாலும், குறுகிய போராக இருந்தாலும் சரி, அதில் வெல்லவே முடியாது என்பதை கடந்த 1965, 1971, 1999ல் நடந்த போர்களின் மூலமாக பாகிஸ்தான் உணர்ந்துள்ளது. அதனால், தீவிரவாதத்தின் மூலமாக மறைமுக போர் தொடுத்து வருகிறது.

இதன்மூலம், பாகிஸ்தானுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை, தோல்வியை தவிர. மறைமுக போர் தொடுத்தும் அதில் கூட பாகிஸ்தானால் வெல்ல முடியாது. மற்ற நாடுகளுடன் சுமூகமான நட்புறவைத்தான் இந்தியா விரும்புகிறது. யாருடைய நிலப்பரப்புக்கும் ஆசைப்படும் நாடல்ல இந்தியா. அதே சமயம், அத்துமீறினால், யாரையும் விட்டுவிட மாட்டோம். நாட்டு மக்களின் பாதுகாப்பையும், இறையாண்மையையும் காக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். எங்கள் மண்ணில் யாராவது தீவிரவாத முகாம்களை நடத்தினாலோ, தாக்குதல்களை நிகழ்த்தினாலோ, அதற்கு எப்படிப்பட்ட பதிலடி தர வேண்டுமென எங்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>