×

கோயில் அருகே அட்டூழியம் ஐதராபாத்தில் மீண்டும் பயங்கரம் பெண் பலாத்காரம், எரித்துக்கொலை: போலீசார் கைது செய்தது போலி கொலையாளிகள்?

திருமலை: ஐதராபாத்தில் கோயில் அருகே பலாத்காரம் செய்து இளம்பெண் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் உள்ள  சம்ஷாபாத்தை சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் பிரியங்காவை லாரி டிரைவர் உட்பட 4 பேர் கூட்டு பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த பரபரப்பு அடங்கும் முன்பு அதே பகுதியில் நேற்று முன்தினம் மாலை மேலும் ஒரு இளம்பெண் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் சம்ஷாபாத் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சித்தலகுடா சாலையில் பங்காரு மகிசம்மா கோயில் அருகே நேற்று முன்தினம் மாலை பொதுமக்கள் சென்றுக் கொண்டிருந்தனர். அங்கு ஒரு இளம்பெண் உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சம்ஷாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை பார்வையிட்டு விசாரித்தனர். எரிக்கப்பட்ட பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கலாம். மர்மநபர்கள் இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்தது தெரியவந்துள்ளது. அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு, தடயங்களை சேகரித்தனர். பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தினமும் பூஜைகள் நடைபெறும் கோயில் அருகே இந்த கொலை நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட இளம்பெண் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதுதொடர்பாக அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை அடையாளம் காண போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஐதராபாத்தில் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இளம்பெண்கள் கொலை செய்யப்பட்டு வரும் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரியங்கா கொலையில் போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். அந்த கொலையால் ஏற்பட்ட பரபரப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்காக போலியாக நான்கு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், பிரியங்கா கொலையை போன்றே 2வது பெண்ணின் கொலையும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி
கால்நடை டாக்டர் பிரியங்கா கொலையில் கைது செய்யப்பட்டுள்ள  முகமது ஆரிப், நவீன்,  சிவா, சென்ன கேசவா ஆகியோரை சத்தார் காவல் நிலைய போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்ல இருந்தனர். மேலும்,  மருத்துவமனையில் அவர்களுக்கு பரிசோதனை நடத்தவும் இருந்தனர். அப்ேபாது அங்கு கூடிய ஆயிரக்கணக்கான மாணவர்களும், பெண்கள் அமைப்பினரும், ‘4 பேரையும் நடுரோட்டில் சுட்டுத்தள்ள வேண்டும்,’ என கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனால், 4 பேரையும் வெளியே அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், மருத்துவர்களை காவல் நிலையத்திற்கே அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி போலீசார்  அறிவுறுத்தினர். ஆனால், போராட்டக்காரர்கள் மறுத்தனர். இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதனால், அப்பகுதி போர்களம் போல் காணப்பட்டது.

பெற்றோர்களை சந்தித்து அமைச்சர் ஆறுதல்
மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண்,  செகந்திராபாத்தில் உள்ள பிரியங்கா வீட்டுக்கு நேற்று சென்று அவரது தந்தை ஸ்ரீதர், தாய் விஜயம்மாவை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், அவர் அளித்த பேட்டியில், ‘‘கொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்தில் விரைவில் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது.

பல வழக்குகளில் கீழ் நீதிமன்றங்களில் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வருகின்றனர். அப்படி இல்லாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்திலேயே அவர்கள் வாதத்தை தெரிவிக்கும்  விதமாக சட்டத்தில்  மாற்றம் செய்யப்பட உள்ளது. பெண்கள் பாதுகாப்பிற்காக 112 என்ற செயலி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை டவுன்லோட் செய்து பயன் பெற வேண்டும்,’’ என்றார்.

Tags : Temple ,rape victim ,Hyderabad ,death , Hyderabad: Woman raped, burned to death
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணி அபார வெற்றி!.