×

ஊராட்சி வரவு - செலவினங்களில் குளறுபடி : கோடிக்கணக்கில் கொள்ளை போகும் மக்களின் பணம்

* சிறப்பு செய்தி

தமிழகம் முழுவதும் 385 ஊராட்சி ஒன்றியங்களில் 12,620 கிராம ஊராட்சிகள் உள்ளன. கிராம ஊராட்சிகளுக்கான அடிப்படை தேவைகள் ஊராட்சி பொதுநிதி, மத்திய, மாநில அரசுகள் வழங்கும்  மாநில நிதிக்குழு மானிய நிதி,  நிபந்தனைக்குட்பட்ட மானிய கணக்கு நிதி, மாவட்ட திட்ட நிதி என பல்வேறு நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிறைவேற்றப்படுகின்றன. இதில் ஊராட்சி பொது நிதியில் பொதுமக்கள் நேரிடையாக  செலுத்தும் சொத்துவரி, வீட்டு வரி, குழாய் வரி, கடைகள், நிறுவனங்களின் உரிமக்கட்டணங்கள், ஆசிரியர், அரசு ஊழியர்கள், தொழில்நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் செலுத்தும் தொழில்வரி ஆகியவற்றின் கீழ்  கிடைக்கும் வருவாய் சேர்க்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும் மாநில நிதிக்குழு மானிய நிதி ஒவ்வொரு ஊராட்சி மக்கள் தொகைக்கு ஏற்ப ₹20 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை ஒவ்வொரு மாதமும் ஒதுக்கப்படுகிறது. இதில் அடிப்படை  கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  இதுதவிர மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியில் இந்திரா நினைவு குடியிருப்பு, பசுமை வீடு திட்டம், மகாத்மா  காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணிகளுக்கு செலவழிக்கப்படுகிறது.

முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பில் இருந்த நிலையில் தலைவர், துணைத் தலைவருக்கு செக் பவர் இருந்தது. இதன் மூலம் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்ட செலவினங்களுக்கான  பதிவேடுகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும். 2017 ஏப்ரலில் புதிய பதிவேடு தொடங்கியிருக்க வேண்டும். இந்நிலையில் கடந்த 2016 அக்டோபர் 26ம் தேதி உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம்  முடிந்தது. அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால், உள்ளாட்சி  தேர்தல் நடத்தப்படாமல் தனி அலுவலர்கள் தற்போது  பொறுப்பு வகிக்கின்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி, மண்டல துணை பிடிஓ ஆகியோர் ஊராட்சி பொதுநிதி செலவினத்துக்கான காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரம் பெற்றவர்கள்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பில் இருந்த போதே ஊராட்சிகளில் நிதி முறைகேடு என்பது நடந்து வந்தது. ஒவ்வொரு ஆண்டும் வரவு-செலவின கணக்குகளில் செய்யப்படாத பணிகளுக்கு செய்ததாக கணக்கு காட்டி ஊராட்சி நிதி கையாடல் செய்யப்படும் சம்பவங்கள் பெரும்பாலான ஊராட்சிகளில் நடந்தன. பதவிக்காலம் முடியும் தருவாயில் பதிவேடுகளை ஒப்படைக்காமல் கொண்டு சென்ற ஊராட்சி தலைவர்கள் தொடர்பாகவும் செய்திகள் வெளியானதுண்டு. மாநிலம் முழுவதுமே இத்தகைய முறைகேடுகள் தொடர்கிறது.நகரை ஒட்டிய ஊராட்சிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தில் அடையாள அட்டை பெற்ற பயனாளிகள் நகரங்களுக்குள் அதிக வருவாய் காரணமாக பணிக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்களின் அடையாள அட்டையை கணக்கில் ஏற்றி முறைகேடு நடக்கிறது. இதற்காக பயனாளிக்கு மாதம் ₹500 வரை வழங்கப்படுகிறதாம்.

மேலும் தனிநபர் கழிவறை திட்டத்திலும் ஏகப்பட்ட முறைகேடுகள் வேலூர், அணைக்கட்டு, ஜவ்வாதுமலை உட்பட மாநிலம் முழுவதும் ஊராட்சிகளில் நடந்து வருகிறது. இத்திட்டத்தில் கழிவறைகள் கட்டப்படாமலேயே கட்டப்பட்டதாக கணக்கு காட்டப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இதுதவிர ஊராட்சிகளில் சிமென்ட் சாலைகள் போடாமலேயே போட்டதாக கணக்கு காட்டுவதும், ஏற்கனவே போடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மீண்டும் போட்டதாக காட்டியும் கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடந்து வருகிறது. ஊராட்சிகளில் நடைபெறும் திட்டப்பணிகளையும், கணக்கு வழக்குகளையும் கண்காணிக்க மத்திய அரசு பல தொழில்நுட்ப நடைமுறைகளை கொண்டு வந்தாலும் முறைகேடுகள் நடப்பதை தடுக்க முடியவில்லை என்பதை துறை உயர்அதிகாரிகளே ஒப்புக் கொள்கின்றனர்.

மாநிலம் முழுவதும் ஊராட்சிகளுக்காக ஒதுக்கப்பட்டு வரும் கோடிக்கணக்கான நிதியில் முறைகேடுகள் நடந்து வருவதாகவும், இதனால் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 40 முதல் 50 சதவீத ஊராட்சிகளின்  கணக்கு பதிவேடுகள் ஒப்படைக்கப்படுவதில் தயக்கம் காட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண ஊராட்சிகளில் இதுவரை நடந்த நிதிமுறைகேடுகள் தொடர்பான விசாரணையை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் திட்டங்களின் பலன் மக்களுக்கு முழுமையாக சென்று சேருவதற்கான வழியை ஏற்படுத்த முடியும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

இல்லாத டிவி, ரேடியோ பராமரிக்க 2.87 லட்சம்

வேலூர் மாவட்டம் வாலாஜா ஒன்றியம் சாத்தம்பாக்கம் ஊராட்சியில் 2012-13, 2013-2014ல் இல்லாத டிவி, ரேடியோ பராமரிப்பு செலவினமாக முறையே 1,55,600ம், 1,32,000ம் என காட்டப்பட்டுள்ளது. அதேபோல் மணல் குவாரி மூலம் 2,73,52,825 வரவு வந்ததை 2,71,60,645 என்று கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் மட்டுமே 1,92,180 கையாடல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 100 நாள் வேலைத்திட்டத்திலும் அடையாள அட்டை வழங்கப்பட்ட பயனாளிகளின் பெயரில் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தனிநபர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு ஊரக வளர்ச்சித்துறையால் வழங்கப்பட்ட பதிலில் இம்முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

ஊராட்சிகளில் 31 கணக்கு பதிவேடு

கிராம ஊராட்சிகளை பொறுத்தவரை மொத்தம் 31 நிதி சார்ந்த பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன. இவை முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், புதிய பதிவேடு தொடங்கப்படவில்லை என்றும்  புகார் எழுந்துள்ளது. கிராமங்களில் புதிய வீடுகளுக்கான வரி நிர்ணயிக்கும் அதிகாரமும், குடிநீர் இணைப்பு வழங்கும் அதிகாரமும், ஊராட்சி செயலருக்கே உள்ளது. இதுபோன்ற அதிகாரம் மாநிலத்தில் பெரும்பாலான  ஊராட்சிகளில் தவறாக பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்துக்கு வீட்டு வரி விதிப்பதற்காக முதலில் டிமாண்ட் நோட்டீஸ் விட வேண்டும். இதற்கு பதிவேடு 1ஐ பராமரிக்க வேண்டும். வீட்டு வரி ரசீது  புத்தகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். தொடர்ந்து வீட்டு வரி கேட்பு பதிவேட்டில் பதிவு செய்து, வரி வசூல் செய்து வந்த பணத்தை 7, 9 எண் பதிவேடுகளில் பதிவு செய்த பிறகு பணத்தை சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில்  செலுத்த வேண்டும். அதேபோல் தொழில் வரி வசூல் செய்து ஊராட்சி பொது நிதியில் சேர்க்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் சில குறிப்பிட்ட ஒன்றியங்களில் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் போலியான ரசீதுகள் மூலம் வரியினங்கள்,  குடிநீர் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளும் உடந்தை?

நிதி ஆதாரங்களின் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? நிதி செலவினங்கள், மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள், வீடுகள் ஒதுக்கீடு என  அனைத்து நிலைகளையும் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள், மண்டல துணை பிடிஓ, ஊராட்சிகள் உதவி இயக்குநர், ஊராட்சிகள் உதவி இயக்குநர் தணிக்கை ஆகியோர் பார்க்க வேண்டும். குறிப்பாக துணை பிடிஓ தணிக்கை ஆண்டு தணிக்கையின் போது ஊராட்சி நிதி கையாளப்பட்ட முறைகளையும், பதிவேடுகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.  பதிவேடுகளில் தவறுகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், ஊராட்சி செயலர்களை நேரில் வரவழைத்து அதிகாரிகள் தேவையானதை வசூலித்துக் கொண்டு அனுப்பி விடுகின்றனர் என புகார்கள் எழுந்துள்ளது.  இவ்வாறு மேற்கண்ட அதிகாரிகளே முறைகேடுக்கு உடந்தையாக இருப்பதால் பல ஊராட்சிகளில் நிதி மோசடி தொடர்கிறது.

Tags : Panel budget,messing up expenses, billions of people's money
× RELATED பூவிருந்தவல்லி அருகே தனியார்...