×

அரசு பள்ளிகளில் பாழாகும் கம்ப்யூட்டர்கள்...?

* தலைமை ஆசிரியர் அறையில் பீரோக்களில் பூட்டி வைப்பு
* கண்ணால் பார்க்காமலேயே தேர்வு எழுத வேண்டிய அவலம்

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்கள் பயன்பாட்டிற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கிய கம்ப்யூட்டர்கள், லேப்-டாப்கள், ஆசிரியர்களின் ஆர்வமின்மையால் பயன்பாடின்றி முடங்கி உள்ளது. பள்ளி மாணவர்கள் கல்வியை எளிமையாகவும், இனிமையாகவும் கற்றுக்கொள்ள மத்திய, மாநில அரசுகள், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு, அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புகளுக்கு, அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.,) திட்டம் மூலம் பள்ளி வளர்ச்சிக்காக நிதி உதவி, உபகரணங்கள் வழங்குகிறது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய பள்ளிகளிலும், அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 4 முதல் 6 கம்ப்யூட்டர்கள், பிரின்டர்கள், லேப்டாப், யு.பி.எஸ்., பாட சம்மந்தமான சி.டி.,க்கள் வழங்கப்பட்டுள்ளன. பாடங்களை கேட்பதை விட, கம்ப்யூட்டரில் பார்த்தால் மாணவர்கள் மனதில் ஆழமாக பதியும். புதிய சிந்தனைகள் தோன்றும் என்ற அடிப்படையில், வகுப்பறைகள் கம்ப்யூட்டர் மயமாகி வருகின்றன. இது தவிர ஒன்றியம் வாரியாக ஒரு பள்ளியை ‘’ஸ்மார்ட் கிளாஸ்’’ ஆக மாற்ற பள்ளி ஒன்றுக்கு தலா 1.90 லட்சம் வழங்கப்படுகிறது.

கம்ப்யூட்டர்களை கையாள்வதற்கு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியையும் அரசு அளித்துள்ளது. மாணவர்களுக்கு வாரத்தில் இரு நாட்கள், இரு பாட வேளையில் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இவ்வளவு வசதிகளையும் அரசு, கல்வித் துறைக்கு செய்து கொடுத்தும் ஒருசில அரசு பள்ளிகள், கம்ப்யூட்டர்களை மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொடுக்காமல் பாதுகாப்பு என்ற பெயரில் பீரோக்கள், தலைமை ஆசிரியர்கள் அறையில் முடக்கி வைத்துள்ளன. நான்கு ஆண்டுகளாக வழங்கப்பட்ட கம்ப்யூட்டர், யு.பி.எஸ்., பிரின்டர் போன்ற விலை உயர்ந்த பொருட்களை, பயன்படுத்தாததால் பேட்டரி சார்ஜ் இறங்கியும் மென்பொருட்கள் தூசி படிந்து பழுதாகி பயன்பாடின்றி உள்ளது. மாணவர்கள், கம்ப்யூட்டர்களை பழுதாக்கி சேதப்படுத்தி விட்டால் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே, அரசு வழங்கிய பொருளை பாதுகாக்கிறோம் என கூறி திட்ட பயனை மாணவர்கள் அனுபவிக்க விடாமல் முடக்கி வைக்கின்றனர்.

அதேநேரத்தில் 50 சதவீத பள்ளிகளில், கம்ப்யூட்டர்களை மாணவர்கள் பயன்படுத்திடவும் ‘’லேப் டாப்’’ மூலம் கற்பித்தல் செய்கின்றனர். கம்ப்யூட்டர்கள் முடக்கப்பட்ட பள்ளிகளை கண்டறிந்து அதை மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து கல்வி ஆர்வலர்கள் கூறுகையில், ‘’பெரும்பாலான அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் இல்லாததால் கம்ப்யூட்டர் காட்சிப் பொருளாகவே உள்ளன. பயனுள்ள திட்டமாக இருந்தும், அரசு நிதி வீணாகி வருகிறது. இதுபோன்ற பள்ளிகளில், ஆசிரியர்களை நியமித்து கம்ப்யூட்டர் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி


தமிழகத்தில் உள்ள பல அரசுப் பள்ளிகளில் கம்ப்யூட்டர்கள் பழுதடைந்துள்ளதால், கண்ணால் பார்க்காமலேயே பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 5,343 அரசு மேல்நிலை பள்ளிகள், 4,996 உயர்நிலைப் பள்ளிகள், 9,996 நடுநிலை பள்ளிகள் உள்ளன. இதில், மேல்நிலை பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 கம்ப்யூட்டர் பாடப்பிரிவில், பல லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் தலா 10 கம்ப்யூட்டர்கள், பாடம் நடத்த ஒரு பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பல பள்ளிகளில் உள்ள கம்ப்யூட்டர்கள் போதிய பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளன. இதனால் ஆசிரியர்களும், மாணவர்களுக்கு கம்ப்யூட்டரை கண்ணில் காட்டாமலேயே பாடம் நடத்தி வருகின்றனர். இதனால், கம்ப்யூட்டர் செய்முறைத் தேர்வினை, பள்ளிக்கு வரும் தேர்வு அதிகாரியிடம் சமாளித்து, செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்களை, ஆசிரியர்கள் பெற்றுத் தருகின்றனர். எழுத்துத் தேர்வு மட்டும் மாணவர்கள் எழுதுகின்றனர். இதனால், கம்ப்யூட்டர் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

Tags : government schools , Computers ruined ,government schools ...?
× RELATED பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி...