×

செல்போனில் அழைத்து கேட்டால் ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை சிறப்பாக இருக்கிறது என கூற வேண்டும்

சென்னை: செல்போனில் அழைத்து கேட்டால் ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை சிறப்பாக இருக்கிறது எனக் கூற வேண்டும் என்று பொதுமக்களிடம் சார்பதிவாளர்கள் கெஞ்சி வருகின்றனர். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்தாண்டு பிப்ரவரி 12ம் தேதி ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யும் திட்டம் அமலுக்கு வந்தது.  போக்குவரத்து துறை, கருவூலத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல துறைகள் ஆன்லைன் மூலம் மக்களுக்கு சேவையை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் தோல்வி அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், பதிவுத்துறை மட்டும் தொடர்ந்து பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் ஆன்லைன் மூலம் பத்திரப் பதிவு செய்யும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. எனவே, மத்திய அரசின் நிதியுதவியை இந்த துறை பெற முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. இந்த நிதியை பெற மத்திய அரசு ஆன்லைன் மூலம் பதிவு செய்ய பொதுமக்களிடம் தொடர்பு கொண்டு பதிவுத்துறை சேவை பற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்கும் என்று தெரிகிறது.

அப்போது பொதுமக்கள் ஆன்லைன் ேசவை சிறப்பாக இருக்கிறது என்று கூற வேண்டும். அப்படி கூறினால் உடனடியாக நிதி கிடைக்கும் என்று தெரிகிறது.எனவே, இது தொடர்பாக பதிவுத்துறை செயலாளர் பாலச்சந்திரன் சமீபத்தில் டிஐஜிக்கள், மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவாளர்கள் உடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, பத்திரம் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் உங்களுக்கு தொலைபேசியில் ஆன்லைன் பத்திரப்பதிவு குறித்து கேள்வி கேட்டால் சிறப்பாக சேவை வழங்கப்படுகிறது என்று பதில் அளிக்குமாறு கூற வேண்டும் என்று சார்பதிவாளர்களுக்கு செயலாளர் அறிவுரை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பதிவுக்கு வரும் பொதுமக்களிடம் ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை சிறப்பாக இருக்கிறது என கூற வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.ஏற்கனவே ஆன்லைன் பதிவு சேவையில் குளறுபடியாலும், இடைதரகர்களின் செயல்பாடுகளாலும் பதிவுக்கு வரும் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நேரத்தில் ஆன்லைன் சேவை சிறப்பாக இருக்குமாறு கூறினால் பொதுமக்கள் கேட்பார்களா என்று சார்பதிவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

Tags : cell phone, the online recordkeeping service ,excellent
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...