×

அறங்காவலர்களை தேர்வு செய்ய நியமிக்கப்பட்ட மாவட்ட குழுவில் அமைச்சர்களின் பிஏக்கள் நியமனத்தால் சர்ச்சை : அறநிலையத்துறையில் குளறுபடி

சென்னை: அறங்காவலர்களை தேர்வு செய்ய நியமிக்கப்பட்ட மாவட்ட குழுவில் அமைச்சர்களின் பிஏக்கள், உறவினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தகுதியான அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படுவார்களா என்ற சந்தேகம் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளது. இதில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களில் பல ஆண்டுகளாக அறங்காவலர் குழு நியமனம் செய்யப்படவில்லை. மாறாக, தக்கார் மட்டுமே பெரும்பாலான கோயில்களில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், கோயில் நிர்வாக பணிகள் ஒரு நபர்களின் கீழ் கொண்டு வரப்பட்டது. இது, ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே, அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர் குழு அமைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி உடனடியாக அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து 2 லட்சம் முதல் 10 லட்சத்திற்கு குறைவான 672 கோயில்களில் அறங்காவலர் குழு நியமனம் செய்ய தகுதியுள்ளோர் பட்டியல் தயாரிக்க 3 பேருக்கும் குறையாத மற்றும் ஐந்து பேருக்கும் மிகாத அலுவல்சாரா உறுப்பினர்களை கொண்ட மாவட்டக்குழு அரசால் அமைக்கப்பட வேண்டியுள்ளது. இக்குழு சார்பில் அறங்காவலர் நியமனம் செய்ய தகுதியுள்ளோர் பட்டியல் தயார் செய்து கமிஷனரிடம் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பதால், மாவட்டக்குழு நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்கள் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று கடந்த பிப்ரவரியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைதொடர்ந்து, இந்த மாவட்டக்குழுவில் இடம் பெற பலர் விண்ணப்பித்தனர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு மாவட்ட குழு நியமனம் செய்வது தொடர்பாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.இந்த நிலையில், மாவட்ட குழு அமைப்பது தொடர்பாக அரசாணை ெவளியிட்டு கடந்த செப்டம்பரில் அறநிலையத்துறை செயலாளர் அபூர்வ வர்மா உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து மண்டல இணை ஆணையர்களால் பெறப்பட்ட விண்ணப்பத்தின் பேரில் தகுதியுள்ள நபர்களை ெகாண்ட மாவட்ட குழு தேர்வு செய்யும் பணி நடந்தது. இந்த மாவட்ட குழு தேர்வில் அமைச்சர்கள், ஆளும் கட்சி மாவட்ட செயலாளர்களின் அழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதற்கட்டமாக 15 மாவட்டங்களுக்கு மாவட்ட குழு தேர்வு செயயப்பட்டுள்ளது. இந்த குழுவில் தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், பெரும்பாலான மாவட்டங்களில் மாவட்ட குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டவர்கள் அமைச்சர், மாவட்ட செயலாளர்களின் பிஏக்கள், உறவினர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.  இந்த மாவட்ட குழுவினர் தான் ஒவ்வொரு கோயில்களிலும் அறங்காவலர் குழுவை தேர்வு செய்ய உள்ளனர். இந்த மாவட்ட குழுவினர் அறங்காவலர்களாக இடம் பெற லட்சக்கணக்கில் பணம் கேட்பதாக கூறப்படுகிறது. இதனால், கோயிலுக்கு தொண்டு செய்ய விரும்புவோர் அறங்காவலர்கள் குழுவில் சேர விண்ணப்பிக்கவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் இந்த மாவட்ட குழுவினர் தேர்வு செய்யும் அறங்காவலர்கள் தகுதியான நபர்களாக இருப்பார்களா என்ற சந்தேகம் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags : Ministers ,Trustees District Trustees ,District Committee , Controversy over appointment,Ministers' BAs ,District Committee appointed , elect Trustees
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...