×

குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற புதிய திட்டம் கோயம்பேட்டில் 486 கோடியில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

சென்னை: கோயம்பேட்டில் 486 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தை திறந்து வைத்து, குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற புதிதாக இரண்டு திட்டங்களை முதல்வர் எடப்பாடி அறிவித்தார். சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கோயம்பேட்டில் நிறுவப்பட்டுள்ள, நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு  நிலையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவிலேயே மிகப்பெரிய மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கொடுங்கையூரில் தொடங்கி வைத்தேன். அதன் தொடர்ச்சியாக, 486 கோடியே 21 லட்சம் ரூபாய்  செலவில் 45 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இப்போது தொடங்கி வைத்துள்ளேன். இதன் மூலம் வடசென்னை மற்றும் பெரும்புதூரில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக தற்பொழுது தினசரி வழங்கப்பட்டு வரும் 40 மில்லியன் லிட்டர் நன்னீருக்குப் பதிலாக சுத்திகரிக்கப்பட்ட நீர்  வழங்கப்பட உள்ளது. இவ்விரு நிலையங்கள் முழுமையாக செயல்படுவதன் மூலம் சென்னை மாநகரில் மொத்தமாக உருவாகும் கழிவுநீரில் 20 சதவீதம் அளவிற்கு மறுசுழற்சி செய்யப்படும்.

இதன் மூலம் நாட்டிலேயே அதிகபட்சமாக கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் மாநிலமாக தமிழ்நாடு திகழும்.  சென்னை நகருக்கு பருவமழை பொய்த்தாலும், தொடர்ந்து குடிநீர் கிடைப்பதற்கு வழிவகை ஏற்படும்  என்பதை உறுதியாக கூறுகிறேன். சென்னை குடிநீர் வாரியத்தால் தற்சமயம் 30 நாட்களில் கழிவுநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில் 2 புதிய  திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, அழைத்தால் இணைப்பு திட்டத்தின் கீழ், பொதுமக்கள் சென்னை குடிநீர் வாரியத்திற்கு 45674567 தொலைபேசி மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ பதிவு செய்தவுடன் எந்தவித ஆவணங்களும் இன்றி எளிய நடைமுறையில் கழிவு நீர் இணைப்பு வழங்கப்படும்.

அதேபோன்று, இல்லந்தோறும் இணைப்பு திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி பகுதிகளில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை கட்டமைப்புகளுடன் கழிவுநீர் இல்லாத வீடுகளுக்கு சென்னை குடிநீர் வாரியமே தாமாக கழிவு நீர் இணைப்பு வழங்கும். இந்த இரண்டு திட்டங்களின் கீழ் இணைப்பு கொடுத்த பின்பு சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய கழிவுநீர் கட்டணத் தொகையை ஒரே தவணையில் முழுமையாகவோ அல்லது 5 ஆண்டுகளுக்குள் 10 தவணைகளாகவோ செலுத்தலாம். இத்திட்டம் வரும் 2ம்தேதி முதல் முதல் நடைமுறைக்கு வரும்.  
இவ்வாறு அவர் பேசினார்.



Tags : Coimbatore ,sewage treatment plant , 486 crore modern sewage ,treatment plant ,Coimbatore
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்