×

இன்று உலக எய்ட்ஸ் தினம் எய்ட்ஸ் தொற்றுள்ளோரை புறக்கணிக்க வேண்டாம் : முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்

சென்னை: எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும், டிசம்பர் 1ம் தேதி  உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மைய கருத்து `சமூக பங்களிப்பின் மூலம் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தடுப்பு பணியில் மாற்றத்தினை ஏற்படுத்துதல்’’ ஆகும். இதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எச்.ஐ.வி./எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படக்கூடாது என்ற உயரிய நோக்கில் தமிழக அரசு, எச்.ஐ.வி / எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காக 10 கோடி வைப்பு நிதியுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் அறக்கட்டளைக்கு இந்த நிதியாண்டில் ₹5 கோடி கூடுதல் வைப்பு நிதியாக வழங்கியுள்ளது. இதன்மூலம் கூடுதலாக 1000 குழந்தைகளுக்கு அந்த நிதியில் இருந்து வரும் வட்டியின் மூலம் ஊட்டச்சத்து மிக்க உணவு, கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழத்தில் எச்.ஐ.வி தொற்றினை கண்டறிய 2,883 நம்பிக்கை மையங்கள் மற்றும் 16 நடமாடும் நம்பிக்கை மைய வாகனங்களை கொண்டு எச்.ஐ.வி தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன், 216 பால்வினை நோய் தொற்று சிகிச்சை மையங்களின் மூலமாக சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எச்.ஐ.வி தொற்றுள்ள பெற்றோரிடம் இருந்து கருவில் உள்ள குழந்தைகளுக்கு நோய்த்தொற்று பரவாமல் தடுக்க அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சை, மாவட்டந்தோறும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையம் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை மையங்களில் அளிக்கப்படுகிறது. எச்.ஐ.வி / எய்ட்ஸ் குறித்த மீம்ஸ் விழிப்புணர்வு போட்டிகளின் மூலமாகவும், நடமாடும் தகவல் கல்வி தொடர்பு விழிப்புணர்வு வாகனங்களின் மூலமாகவும், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதி ஏற்க வேண்டும். எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றுள்ளோரை பரிவுடன் அரவணைத்து, சம உரிமை அளித்து, அவர்களது தன்னம்பிக்கை வளர உதவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : World AIDS Day , orld AIDS Day, Today AIDS
× RELATED முதல்வர், துணை முதல்வர் ஜனாதிபதியை வரவேற்றனர்