×

அனைத்து குளறுபடிகளையும் சரிசெய்து உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

சென்னை:  உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் உள்ள குளறுபடிகளையும் சரி செய்து உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது, மா.கம்யூ. கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டட மத்தியக்குழு மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது :உச்சநீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலுக்கான கால அட்டவணையை வெளியிட வேண்டுமென இறுதியாக உத்தரவிட்டுள்ளது. இதற்கு பின்னரும் முறையான தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அதிமுக அரசு மேற்கொள்ளவில்லை. மாநிலம் முழுவதும் தொகுதி வரையறைகள் மேற்கொள்ளப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான புகார்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே நேரடி தேர்தல் என அறிவிக்கப்பட்டிருந்த தேர்தல்களை மறைமுகத் தேர்தல் என கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தனித்தனியான மாவட்ட ஊராட்சிகள் அமைக்க வேண்டுமென்ற ஊராட்சி சட்ட விதிகளுக்கு விரோதமாக, ஒரே மாவட்ட ஊராட்சியாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய குழப்பங்களை உருவாக்குவதோடு இதில் நீதிமன்றத் தலையீட்டின் மூலம் தேர்தலை தள்ளிப்போட முடியுமா? என்ற உள்நோக்கத்துடனேயே அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. அதிமுக அரசின் இத்தகையப் போக்கு மக்கள் பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலைமை தாங்கும் அடிப்படை ஜனநாயக உரிமையை தட்டிப்பறிக்கும் நடவடிக்கையாகும். எனவே, உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள அடிப்படையில் தற்போது நிலவும் அனைத்து குறைபாடுகளையும் சரிசெய்து உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை தவிர்த்து இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை உறுதி செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Tags : elections , All problems , hold local elections,Marxist Communist Emphasis
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...