×

விளைச்சல் பாதிப்பு, மழையால் சாம்பார் வெங்காயம் 200ஐ தொட்டது

சென்னை: விளைச்சல் பாதிப்பால் சாம்பார் வெங்காயம் 200ஐ தொட்டதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்றும் வெங்காயம் விலை உயர்ந்தது. இது குறித்து சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது: கோயம்பேடு மொத்த மார்க்கெட்டுக்கு வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால், கடந்த மாதம் 40க்கு விற்ற சின்ன வெங்காயம்(சாம்பார் ெவங்காயம்) தற்போது 130, 150 என்று தரத்திற்கு ஏற்ப விற்பனையாகி வருகிறது. அதே போல் பெரிய வெங்காயம்(பல்லாரி) 30க்கு விற்கப்பட்டது. இதுவும் விலை உயர்ந்துள்ளது. அதாவது மகாராஷ்டிரா பெரிய ெவங்காயம் 80, ஆந்திரா பெரிய வெங்காயம் 70க்கும் விற்கப்படுகிறது.

வெங்காயம் விலை உயர்வு பொங்கல் வரை நீடிக்கும். புதிய வெங்காயம் வந்தால்தான் அதன் விலை குறையும். மேலும் விளைச்சல் அதிகரிப்பு, வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை குறைந்து வருகிறது. பீன்ஸ் (கிலோ) 40லிருந்து 25, முட்டை கோஸ் 30லிருந்து 20, நூக்கல் 40லிருந்து 30, பச்சை பட்டாணி 120லிருந்து 60, தக்காளி 30லிருந்து 20,  அவரைக்காய் 25லிருந்து 40, பச்சை மிளகாய் 30லிருந்து 20, வெண்டைக்காய் 40லிருந்து 30, பாகற்காய் 35லிருந்து 30 ஆகவும் விலை குறைந்துள்ளது. காளிப்பிளவர் 30, சேனைக்கிழங்கு 30 என்று அதே விலையில் விற்பனையாகிறது. உருளைக்கிழங்கு மட்டும் கிலோ 15லிருந்து 20 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 20 நாட்களில் காய்கறி விலை குறையும். அதாவது, புதிய காய்கறி வரத்து வரத் தொடங்கும். பொங்கல் நேரத்தில் மேலும் காய்கறி விலை குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் தான் பெரிய வெங்காயம் 80, சின்ன வெங்காயம் 150க்கு விற்கப்படுகிறது. ஆனால் சில்லறை விலையில் பெரிய வெங்காயம் விலை 120, 130 என்றும், சின்ன வெங்காயம் தரத்திற்கு ஏற்றார் போல் 190, 200 வரை விற்கப்படுகிறது. வெங்காயம் விலை ெதாடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களை குறிப்பாக பெண்களை  கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வெங்காயத்தை உறித்தால் தான் கண்ணீர் வரும். ஆனால், தற்போது வெங்காயம் விலையை கேட்டாலே கண்ணீர் வருகிறது என்று பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது வெங்காயம் விலை ஏற்றத்தை குறிக்கும் வகையில் நெட்டிசன்கள் வித்தியாசமான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்காய பச்சடி கட்

பிரியாணி செய்வதற்கு வெங்காயம் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. வெங்காயம் அதிக அளவில் சேர்த்தால் தான் பிரியாணி ருசி கொடுக்கும். விலை உயர்வால் பிரியாணியில் வெங்காயம் சேர்ப்பதை சில ஓட்டல்களில் குறைத்துள்ளனர். அதே நேரத்தில் பிரியாணி சாப்பிடும் போது வெங்காயம் பச்சடி வழங்கப்படும். தற்போது அதற்கு பதிலாக கத்தரிக்காய் தொக்கு மட்டும் வழங்கப்படுகிறது. சிறிய மற்றும் பிளாட்பார கடைகளில் பிரியாணிக்கு ெவங்காயம் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கத்தரிக்காய் தொக்கு, புதினா சட்னி மட்டும் வழங்கப்படுகிறது.

Tags : Yield impact, rainfall touched 200 sambar onions
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...