கள்ளத்தொடர்பு விவகாரத்தால் மோதல்: ஆசிட் வீசியதில் விஏஓ, ஏட்டு படுகாயம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை உண்ணாமலை நகரை சேர்ந்தவர் ஸ்ரீபால்(42). இவர் திருவண்ணாமலை கியூ பிரிவு போலீஸ் ஏட்டு. இவரது மனைவி ஞானசுந்தரி (33). மாமியார் விமலா. திருவண்ணாமலை தாலுகா ஆர்ஐ. இந்நிலையில், கிளிப்பட்டு கிராமத்தில் விஏஓவாக பணியாற்றும் சிவக்குமார்(30), என்பவர் விமலாவை வாகனத்தில் அழைத்து வந்து வீட்டில் விட்டு விட்டு செல்வாராம். அப்போது விமலாவின் மகள் ஞானசுந்தரிக்கும், சிவக்குமாருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, கடந்த ஆண்டு திருவண்ணாமலை மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சமரசம் செய்து அனுப்பினர். ஆனால் அதற்கு பின்னரும் சிவக்குமார், ஞானசுந்தரிக்கு தொல்லை கொடுத்து வந்தாராம்.

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் ஸ்ரீபால் பணிக்கு சென்றார். சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த விஏஓ சிவக்குமார், ஞானசுந்தரியிடம் தகராறு செய்துள்ளார். இது இரவு வீடு திரும்பிய ஸ்ரீபாலுக்கு தெரியவந்தது. இதனால், ஆத்திரமடைந்த அவர், நள்ளிரவு 12 மணியளவில் மாமியார் விமலாவுடன் திருவண்ணாமலை தென்றல் நகரில் உள்ள சிவக்குமார் வீட்டிற்கு சென்று தட்டிக்கேட்டாராம். இதில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில், இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஆசிட் வீசியுள்ளனர். இதில் முகம், கை, கால்கள் வெந்து சிவக்குமார் அலறித்துடித்தார். அதேபோல் ஸ்ரீபாலின் மார்பு, கை, கால்கள் மீதும் ஆசிட் தெறித்தது. படுகாயமடைந்த இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

இதுகுறித்து, விஏஓ சிவக்குமார் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் அளித்த புகாரில், ஏட்டு ஸ்ரீபால் கொண்டுவந்த ஆசிட்டை என் மீது ஊற்றினார் என்று புகார் அளித்துள்ளார். ஏட்டு ஸ்ரீபால் அளித்த புகாரில், விஏஓ சிவக்குமார் வீட்டிற்கு சென்று தட்டிக்கேட்டபோது வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து என் மீது ஊற்ற முயன்றார். அப்போது தடுத்ததில் 2 பேர் மீதும் ஆசிட் தெறித்தது என்று கூறியுள்ளார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். சிவக்குமார் மீது கள்ளக்காதல் தகராறு தொடர்பான வழக்கு ஏற்கனவே வேட்டவலம் போலீசில் உள்ளது. ஆசிட் வீச்சில் விஏஓ சிவக்குமாரின் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>