வேலூர் மத்திய சிறையில் முருகன் அறையில் மீண்டும் செல்போன் பறிமுதல்

வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் முருகன், வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த அக்டோபர் 18ம் தேதி சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் முருகன் அறையில் இருந்து ஆன்ட்ராய்டு செல்போனை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அவர் 2வது பிளாக்கிற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை செல்போன் ஆய்வு குழுவினர் நடத்திய ஆய்வில் முருகன் தங்கிருந்த 2வது பிளாக்கில் உள்ள ஒரு அறையில் இருந்து மீண்டும் ஒரு செல்போன் பறிமுதல் செய்துள்ளனர். அந்த செல்போனில் ஐஎம்இஐ எண் அழிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சிறை கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜிக்கு தகவல் தெரிவித்த பின்னரே காவல் நிலையத்தில் புகார் செய்யப்படும். ஆனால் நேற்று முன்தினம் செல்போன் பறிமுதல் தொடர்பாக தகவல்களை தனிப்பிரிவு போலீசாருக்கும் கூட தெரிவிக்காமல், காவல் நிலையத்திலும் புகார் அளிக்காமல் சிறை நிர்வாக அதிகாரிகள் மூடி மறைக்க முயற்சி செய்வது வரும் சம்பவம் சிறை காவலர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேறு மாநில சிறைக்கு மாற்ற மனு: பெண்கள் தனிச்சிறையில் உள்ள முருகனின் மனைவி நளினி, விடுதலை தாமதம், பரோல் வழங்குவதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் தன்னை கருணை கொலை செய்யக்கோரி பிரதமருக்கு மனு அனுப்பி விட்டு சாகும் வரை உண்ணாவிரதத்தை கடந்த 28ம் தேதி தொடங்கினார். 3வது நாளாக நேற்றும் உண்ணாவிரதம் தொடர்ந்தார்.

இந்நிலையில், நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி நேற்று வேலூர் சிறைகளில் உள்ள நளினி, முருகனை சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தில் நளினி கருணை கொலையை ஆதரித்தும் வலியுறுத்தியும் மனு கொடுத்துள்ளார். மற்றொரு மனு தமிழக உள்துறை செயலாளருக்கு கொடுத்துள்ளார். அதில் இருவரையும் கர்நாடக சிறைக்கோ அல்லது வேறு மாநிலத்துக்கோ மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் என்றார்.

Related Stories:

>