×

எழுத்துக்களை கூட்டி வாசித்த ஆங்கில ஆசிரியை சஸ்பெண்ட்: உபி.யில் கலெக்டர் அதிரடி

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் ஆங்கிலத்தை எழுத்து கூட்டி வாசித்த ஆங்கில ஆசிரியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் தேவேந்திர குமார் பாண்டே. இவர் 2 நாட்களுக்கு முன் சிக்கந்தர்பூர் சரவுசி பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு திடீரென சென்று ஆய்வு நடத்தினார். எட்டாம் வகுப்புக்கு சென்ற அவர், மாணவிகளிடம் பாடம் தொடர்பாக சில கேள்விகளை கேட்டார். அதற்கு அவர்கள் பதில் தெரியாமல் விழித்தனர். பின்னர், ஆங்கில பாடப் புத்தகத்தை கொடுத்து வாசிக்க சொன்னார்.

அதற்கு அவர்களால் ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்க கூட முடியவில்லை. இதைத் தொடர்ந்து அவரது சந்தேகம் வலுக்கவே, ஆங்கில ஆசிரியை ராஜகுமாரியிடம் ஆங்கில புத்தகத்தை கொடுத்து வாசிக்க சொன்னார். அப்போது அவர் எழுத்து கூட்டி ஆங்கிலம் வாசித்ததை கண்ட ஆட்சியர் அதிர்ச்சி அடைந்தார். கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர் ராஜகுமாரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அவரிடம் விளக்கம் சொல்லி தப்பிக்க முயன்ற அவரிடம், `நீங்கள் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் அல்லவா? மொழியாக்கம் செய்யாவிட்டாலும் கூட பரவாயில்லை.

ஆனால், பார்த்து வாசிக்கவே இப்படி திணறுகிறீர்களே? உங்களை வாசிக்க தானே சொன்னேன்’ என்று கோபமாக கூறினார் கலெக்டர். இது குறித்து மாவட்ட ஆரம்ப கல்வி அதிகாரி பிரதீப் குமார் கூறுகையில், ``மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையை சமர்ப்பித்த பின்னரே, அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுக்கப்படும்’’ என்று கூறினார்.

Tags : teacher ,English ,UP , English Teacher, Suspend
× RELATED கல்லூரி மாணவர்களின் வாக்காளர்...