×

சாலையில் கிடந்த பணப்பையை எடுத்துச்சென்ற விவகாரம்: துப்பாக்கி முனையில் மேஸ்திரியை காரில் கடத்தி கொலை

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கலவை அருகே தட்டச்சேரியை சேர்ந்தவர் முருகன்(50), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி தேவகி. இவர்களது மகன் கிருஷ்ணன்(25). கடந்த 8 ஆண்டுக்கு முன்பு முருகன் குடும்பத்துடன் சென்னை தாம்பரம் மூகாம்பிகை நகரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக முருகன் வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்ததோடு, தாராளமாக பணம் செலவு செய்ததோடு, பார் ஊழியர் முனியாண்டிக்கு டிப்சும் அள்ளி வீசியுள்ளார். சந்தேகமடைந்த அவர் கடந்த 22ம் தேதி போதையில் இருந்த முருகனிடம் நைசாக பேச்சு கொடுத்து புதையல் எடுத்தாயா என விசாரித்தார். அதற்கு, அவர் தீபாவளியன்று சாலை ஓரத்தில் கருப்பு நிற பை ஒன்று இருந்தது. அதில் கட்டு கட்டாக பணம் இருந்தாக தெரிவித்தார்.

இதைக்கேட்ட முனியாண்டி இதுகுறித்து முடிச்சூரை சேர்ந்த நண்பன் அருண்பாண்டியன்(32) என்பவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அருண்பாண்டியன் நண்பர்களுடன் முருகனை தேடி அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் இல்லாததால் மகன் கிருஷ்ணனிடம் கருப்பு நிற பையை பற்றி விசாரித்து, தந்தை வந்தவுடன் வாங்கி வை என்று கூறிவிட்டு சென்றனர். இதுபற்றி முருகனிடம் தெரிவித்ததும், இரவோடு இரவாக வீட்டை காலி செய்து குடும்பத்துடன் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த ராந்தத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். மறுநாள் அருண்பாண்டியன் வந்து பக்கத்து வீட்டுக்காரர்களிடம் முருகனின் செல்போன் நம்பரை கேட்டு போன் செய்தபோது சுவிட்ச்ஆப் என வந்தது. இருப்பினும் செல்போன் சிக்னலை வைத்து இருப்பிடத்தை கண்டுபிடித்த அருண்பாண்டியன் கடந்த 23ம் தேதி காரில் நண்பர்களுடன் ராந்தம் சென்றார்.

அங்கிருந்த முருகன், தேவகி, கிருஷ்ணன் ஆகியோரை துப்பாக்கி முனையில் காரில் பள்ளிக்கரணைக்கு கடத்திச்சென்று பணப்பையை கேட்டு மிரட்டியுள்ளனர். வீட்டின் எதிரே உள்ள காலி மனையில் பணப்பையை புதைத்து வைத்திருப்பதாக முருகன் கூறவே அங்கு சென்று தோண்டிப்பார்த்தார். ஆனால் அங்கு பை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அருண்பாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த 24ம் தேதி பள்ளிக்கரணை பெரிய கோவிலம்பாக்கம் அருகே ஒரு ஷெட்டில் வைத்து முருகன், தேவகி, கிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் சரமாரியாக தாக்கினர். இதில் முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மறுநாள் காரில் முருகன் சடலத்தையும், கிருஷ்ணன், தேவகி ஆகியோரையும் ஏற்றி கலவை அருகே தட்டச்சேரியில் உள்ள வீட்டில் இறக்கிவிட்டு, முருகன் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக கூறும்படியும், இதுகுறித்து யாரிடமாவது கூறினால் உங்களையும் கொன்று விடுவோம் என மிரட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

அதன்படி முருகன் சடலத்தை அவர்கள் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் தகவலையடுத்து வாழப்பந்தல் போலீசார் தேவகி, கிருஷ்ணன் ஆகியோரிடம் துருவி துருவி விசாரித்தனர். அதில், கருப்பு நிற பையில் இருந்த பணம் தொடர்பாக முருகன் அடித்து கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் முருகன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சென்னை முடிச்சூர் மற்றும் பள்ளிக்கரணையை சேர்ந்த அருண்பாண்டியன், எழில், சேகர், முனியாண்டி உட்பட 10 பேரை நேற்று கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 4 கார்களை பறிமுதல் செய்தனர். பணப்பை குறித்து விசாரிக்கின்றனர்.

போலீஸ் சீருடையில் சென்று மிரட்டிய எஸ்.ஐ. மகன்

மேஸ்திரி முருகன் கொலையில் கைது செய்யப்பட்டவர்களில் அருண்பாண்டியன் போலீஸ் அதிகாரி சீருடையில் சென்று முருகன் குடும்பத்தினரை மிரட்டி உள்ளான். தான் போலீஸ் அதிகாரி என்றும் மற்றவர்கள் மப்டியில் வந்துள்ளனர். உனக்கு கிடைத்துள்ள புதையலை கொடுத்துவிடு, அரசாங்கத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மிரட்டியே அவர்களை காரில் ஏற்றி சென்றுள்ளனர். இதில் அருண்பாண்டியனின் தந்தை கன்னியப்பன் தற்போது சென்னை சங்கர் நகரில் போலீஸ் எஸ்ஐயாக பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.

Tags : road , Murder
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...