ரூ.5,000 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்து: தொழில் தொடங்குவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

ஆலந்தூர்: தொழில் தொடங்குவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மாவட்ட வாரியாக வழங்கப்பட உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழக அரசுடன், புதிய தொழில் முதலீடுகள் மற்றும் தொழில்திறன் மேம்பாடுகள் குறித்த கருத்தரங்கம் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடைபெற்றது. கருத்தரங்கிற்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயலாளர் க.சண்முகம் வரவேற்றார். இந்த கருத்தரங்கில், ரூ.5,027 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன்மூலம் 20,351 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது. விழாவில் தொழில்துறை சார்ந்த குறைகளை களைவதற்காக, தொழில் நண்பன் என்ற இணையதளத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, தொழில் திறன் மேம்பாட்டு கையேடுகளையும் வெளியிட்டார்.

இதை தொடர்ந்து, கருத்தரங்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘தேசிய அளவிலான பொருளாதார பங்களிப்பில் தமிழகம் 2வது இடத்தை வகிக்கிறது. தேசிய அளவில் முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தொழில் தொடங்குவதற்கு ஏற்ற உள்கட்டமைப்புகளை கொண்ட மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. மேலும் தொழில் தொடங்குவதற்கு தேவையான திறன் மேம்பாடு பயிற்சியையும் தமிழக அரசு வழங்க உள்ளது. இந்த பயிற்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் அளிக்கப்பட உள்ளது. நான் அமெரிக்கா சென்று, கொண்டு வந்த ரூ.112 கோடி முதலீடுகள் விரைவில் செயல்படுத்தப்படும்’’ என்றார். இந்த கருத்தரங்கில், தொழில் அதிபர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அரசுத் துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Signing , Skill Development Training
× RELATED இழுபறியில் இருந்த வர்த்தக...