பேஸ்புக் மூலம் காதலில் வீழ்த்தி `தாதா’வை மடக்கிய பெண் எஸ்ஐ: வலைதளங்களில் குவிகிறது பாராட்டு

போபால்: திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தாதாவை மடக்கி பிடித்த மத்திய பிரதேச மாநில பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரபல ரவுடி பால்கிசான் சவ்பே. இவன் மீது 15க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. இவனை பிடிக்க மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மாநில போலீசார் முயற்சித்தும், அவன் தொடர்ந்து தப்பி வந்தான். இந்நிலையில், இவனை பற்றி கேள்விப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மாதவி அக்னிகோத்ரி, அவனை எப்படியாவது மடக்கி பிடித்து கைது செய்ய விரும்பினார். இதையடுத்து சவ்பேவை குறித்த தகவல்களை திரட்ட தொடங்கினார். அதில், அவன் பெண்கள் விஷயத்தில் பலவீனமானவன் என்றும், பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, பேஸ்புக்கில் தன்னை ராதா லோதி என்ற பெயரில் அறிமுகப்படுத்தி கொண்ட எஸ்ஐ மாதவி, அவனிடம் தான் சத்தார்பூர் மாவட்டத்தை சேர்ந்தவள் என்றும், டெல்லியில் தற்போது கூலி வேலை பார்த்து வருவதாகவும் தெரியப்படுத்தினார். இதனை நம்பிய சவ்பே, ராதா பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் மாதவியின் காதல் வலையில் மயங்கினான். அவனது செல்போன் எண்ணை பெற்ற மாதவி மூன்று நாட்கள் மட்டுமே பேசிய நிலையில், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சவ்பே கூறினான். இதற்கு மாதவியும் சம்மதம் தெரிவித்தார். திருமணத்துக்கு முன் சந்திக்க விரும்புவதாக கூறிய சவ்பேயிடம், ம.பி.-உ.பி. எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கோயில் ஒன்றுக்கு வரும்படியும் தான் `பிங்க்’ நிற உடையில் வருவதாகவும் மாதவி தெரிவித்தார்.

இதனை நம்பி, காதலியை சந்திக்கும் மகிழ்ச்சியில் பூங்கொத்து, இனிப்புகளுடன் தனியாக பைக்கில் வந்தான் சவ்பே. அப்போது பிங்க் நிற ஆடையில் அங்கு வந்த மாதவி, `ராதா வந்து விட்டாள்’ என்று கூறியபடி சவ்பே அருகில் சென்றார். அப்போது, அங்கு சாதாரண உடையில் மறைந்திருந்த காவலர்கள் கொத்தாக மடக்கி பிடித்து அவனை கைது செய்தனர். பல ஆண்டுகளாக போலீசாருக்கு `டிமிக்கி’ கொடுத்து வந்த பிரபல தாதாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி மடக்கி பிடித்த மாதவிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகிறது. இவர், பல்கலைக் கழகத்தில் சிறந்த ஓட்டப்பந்தய வீராங்கனையாக திகழ்ந்தவர். குண்டு எறிதலில் தங்கமும் வென்றுள்ளார்.

Tags : The Dad , Facebook, Dad, Female SI
× RELATED கார் மோதி எஸ்ஐ பலி