×

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி

* 169 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு
* விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணி அரசு வெற்றி பெற்றது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் சேர்ந்து மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணியை உருவாக்கி மாநிலத்தில் ஆட்சியமைத்துள்ளன. கடந்த வியாழக்கிழமையன்று தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடந்த விழாவில் இந்த கூட்டணி அரசின் முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டார். புதிய கூட்டணி அரசின் பெரும்பான்மையை டிசம்பர் 3ம் தேதிக்குள் நிரூபிக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், அரசின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நேற்று சட்டப்பேரவை கூடியது. அவை கூடியதும் பாஜ உறுப்பினர்கள் அனைவரும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்றும் ‘ஹர் ஹர் மகாதேவ்’ என்றும் கோஷமிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட தற்காலிக சபாநாயகர் திலீப் வல்சே பாட்டீல், எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்நவிசை பேச அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். தேவேந்திர பட்நவிஸ் பேசுகையில், இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்ட காளிதாஸ் கொலம்ப்கர் நீக்கப்பட்டு தற்காலிக சபாநாயகராக திலீப் வல்சே பாட்டீ நியமிக்கப்பட்டதற்கு எதிப்பு தெரிவித்தார். மேலும் பேரவை விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த அவை கூட்டப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு அவை தொடங்கப்பட்டு தேசிய கீதத்துடன் நிறைவு பெற வேண்டும். ஆனால், வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படாமலேயே அவை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பது விதிகளுக்கு முரணானது என்றார். தேவேந்திர பட்நவிஸ் பேசி முடித்ததும், அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான் முன்மொழ்ந்தார்.

அப்போது பா.ஜனதா உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி உறுப்பினர்களிடையே வெளிப்படையான முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பின் போது அவையில் இருந்த 169 உறுப்பினர்களும் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணி அரசு வெற்றி பெற்றதாக தற்காலிக சபாநாயகர் திலீப் வல்சே பாட்டீல் அறிவித்தார். ஏ.ஐ.எம்.ஐ.எம்.(2), மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா மற்றும் மார்க்சிஸ்ட் (தலா 1) கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஹிதேந்திர தாக்கூர் தலைமையிலான பகுஜன் விகாஸ் அகாடி(3), சமாஜ்வாடி(2), பிரஹார் ஜன்சக்தி கட்சி(2), சுவாபிமாண் சேத்கரி சங்கட்டனா, உழவர் உழைப்பாளர் கட்சி(தலா 1) உறுப்பினர்களும், 6 சுயேச்சைகளும் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை தொடர்ந்து முதல்வர் உத்தவ் தாக்கரே தனது அமைச்சரவையை விரைவில் விரிவாக்கம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக வரும் 3ம் தேதியன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நானா பட்டோலே சபாநாயகர் ஆகிறார்
மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து சபாநாயகரை தேர்வு செய்வார்கள். மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணி சார்பில் சபாநாயகர் பதவிக்கு காங்கிரசை சேர்ந்த நானா பட்டோலே வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். அவருக்கு எதிராக முர்பாட் தொகுதி எம்.எல்.ஏ. கிஷன் கதோரையை பாஜ களமிறக்கியுள்ளது.

அஜித் பவாருடன் பாஜ எம்பி. திடீர் சந்திப்பு
உத்தவ் தாக்கரே தலைமையிலான புதிய அரசு நேற்று பிற்பகலில் சட்டப்பேரவையில் பலப்பரீட்சையை சந்திக்க இருந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவாரை நேற்று காலை நாண்டெட் தொகுதி பா.ஜனதா எம்.பி., பிரதாப்ராவ் சிக்கிலிகர் திடீரென சந்தித்து பேசினார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் “இது ஒரு மரியாதை நிமித் தமான சந்திப்புதான்” என்று அஜித் பவார் கூறினார்.

Tags : government ,Maharashtra ,Uddhav Thackeray ,assembly ,confidence vote , Maharashtra Legislative Assembly, Uthav Thackeray, winner
× RELATED ஏக்நாத் தலைமையில் செயல்படுவது...