×

மேயர், தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல் இல்லை என்பதால் அதிமுக மீது பாமக, பாஜ தேமுதிக கட்சிகள் அதிருப்தி

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அதிமுக மீது அதன் கூட்டணி கட்சிகளான பாமக, பாஜ, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு கூட்டணியில் மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல் இல்லை, மறைமுக தேர்தல் என்று அறிவித்து விட்டது. இதனால் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு கடும் ஏமாற்றம் அடைந்துள்ளது. இந்த ஏமாற்றத்தை தமிழக பாஜ தலைவர்கள் வெளிப்படையாகவே சொல்லி விட்டனர். அதேநேரம் பாமக மற்றும் தேமுதிக தலைவர்கள் அதிமுக அரசின் இந்த அறிவிப்புக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதேநேரம் கடந்த 24ம் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி பேசும்போது, “தமிழகத்தில் விரைவில் பாமக ஆட்சி உறுதியாக அமையும். இதை யார், எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும். என்னிடம் ஒரு மந்திரம் இருக்கிறது. அந்த மந்திரத்தை பற்றி இப்போது சொல்ல மாட்டேன். நேரம் வரும்போது சொல்வேன்’’ என்று கூறினார். அதேபோன்று, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடந்த 24ம் தேதி மதுரையில் அளித்த பேட்டியில், ஆவின் பால் குறித்து கடுமையாக பேசினார்.

அதிமுக கூட்டணி கட்சிகளான பாமக, தேமுதிக தலைவர்களான அன்புமணி மற்றும் பிரேமலதா ஆகியோர் இப்படி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாமக தலைவர்கள் அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகவே கூறப்படுகிறது. அதனால்தான் விரைவில் தமிழகத்தில் பாமக ஆட்சி உறுதியாக அமையும் என்று வெளிப்படையாகவே பேசியுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் தங்களை அதிமுக ஏமாற்ற நினைக்கிறது என்றே இந்த இரண்டு கட்சிகளும் கருதுகிறார்கள். ஆனால் வெளிப்படையாக பேச முடியாமல் இப்படி மறைமுகமாக பேசியுள்ளனர் என்று அந்த கட்சியின் நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

இனி மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகள் பாமக, பாஜ, தேமுதிக கட்சிகளுக்கு கிடைக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு மாநகராட்சியிலும் மற்றும் நகராட்சி, பேருராட்சிகளில் அதிக கவுன்சிலர்கள் இடங்களில் போட்டியிட்டு, பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற வேண்டும். ஆனால், குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கைக்கு மேல் கவுன்சிலர்கள் சீட்டுகளை கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக ஒதுக்காது. அதனால், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, அதிமுக தலைமையிடம் நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது கூட்டணி கட்சிகள் மேயர் மற்றும் தலைவர் பதவிகளை கேட்பார்கள். ஆனால், அதிமுக முக்கிய பதவிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்காது என்றே கூறப்படுகிறது. இதனால் அதிமுக கூட்டணியில் மோதல் வெடிக்கும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். காரணம், களப்பணியில் முக்கிய பங்காற்றப்போவதே அவர்கள் தான் என்பதால் அதிமுகவின் வெற்றிக்கு கூட்டணி கட்சிகள் வேட்டு வைத்துவிடுமோ என்ற அச்சமே காரணம் என கூறப்படுகிறது.

Tags : BJP ,AIADMK ,mayor ,election , AIADMK
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...