உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி திமுக தொடர்ந்து குரல் கொடுக்கிறது: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: “திமுகதான் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, வார்டு 68 பந்தர் கார்டன் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுதல், கூடுதல் நிதியாக எம்பி வில்சனின் ஒப்புதல் கடிதத்தை வழங்குதல், மேம்பாட்டு நிதி ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் பள்ளிக்கு கணினி, ஆர்.ஓ.பிளான்ட்-1, பிரின்டர்-1, கேபிள், பயிற்சி முகாம்-5, ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்தல், வார்டு 67 திரு.வி.க நகர், பல்லவன் சாலையில் உள்ள பெட் மருத்துவமனை மேம்படுத்தும் பணி அடிக்கல் நாட்டுதல், வார்டு 64 ஹரிதாஸ் தெரு தாமரை குளத்தில் மு.க.ஸ்டாலினின் சொந்த நிதி ரூ.1.35 லட்சத்தில் சிசிடிவி கேமரா துவக்கி வைத்தல், வார்டு 65 பள்ளி சாலை-அரசினர் நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டுதல், அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு ஆர்ஓ பிளாண்ட் அமைக்கும் பணி துவக்கி வைத்தல், ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்தல், வார்டு 66 கார்த்திகேயன் சாலையில் புதிய பேருந்து நிறுத்தம் அமைத்தல் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி, 5 கல்லூரி 10 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி, 5 மடிக்கணினி , 8 தையல் இயந்திரம், 4 மருத்துவஉதவி, 4 சக்கர தள்ளு வண்டி-5. மீன்பாடி வண்டி-5, இஸ்திரி பெட்டி-1, திருமண உதவி-2, மாவு அரவை இயந்திரம்-2, கோலமாவு வண்டி-1, கண் கண்ணாடி மற்றும் புத்தாடை வழங்குதல்-49 மொத்தம் -97 பேதுக்கு நல உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி பல்வேறு திட்டங்களைப் போட்டு வருகிறது. அதற்காக பலரை மறைமுகமாக வழக்கு மன்றத்திற்கு அனுப்பி கொண்டிருக்கிறார்கள்.திமுக சார்பில் கடந்த 3 வருடங்களாக ஆலந்தூர் பாரதி நீதிமன்றத்துக்கு சென்று தேர்தலை எந்த காரணத்தை கொண்டும் நிறுத்தக்கூடாது. நடத்தியே தீரவேண்டும். ஆனால் தேர்தல் நடத்துவதற்கு முன்னர் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஷரத்துகள், இடஒதுக்கீடு எஸ்.சி, எஸ்.டி.க்கான இடஒதுக்கீடு இவற்றையெல்லாம் முறைப்படுத்தி நடத்த வேண்டும் என சொல்லி இருக்கிறோம். அந்த அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் இதெல்லாம் முறைப்படுத்தி நடத்துங்கள் என்று சொல்லி இருக்கிறதே தவிர தி.மு.க தேர்தலை நிறுத்தியதாக சொல்லவில்லை. நான் மக்கள் மன்றத்தில் மட்டும் இல்லை. சட்டமன்றத்திலும் பதிவு செய்துள்ளேன். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வார்டு வரையறையை முறைப்படுத்த வேண்டும்.

அதற்கடுத்து புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதை வரவேற்கிறேன். ஆனால் அந்த புதிய மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகளை மேற்கொள்ளவில்லை. அடுத்தது பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியின் பட்டியலின, பழங்குடியின பெயர்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இவற்றையெல்லாம் முறைப்படுத்தி அரசு முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் நிறைவேற்றி உள்ளார்களா என்பது என்னுடைய கேள்வி.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியது மாநில தேர்தல் ஆணையம். அந்த கூட்டத்தில் திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, வழக்கறிஞர் செயலாளர் கிரிராஜன் ஆகியோர் நேரிடையாக சென்று மீண்டும் நினைவுப்படுத்தி உள்ளார்கள். இதுவரைக்கும் பதில் இல்லை. ஆகவே இதெல்லாம் முதலமைச்சர் சொல்கிறாரா? ஆட்சி சொல்கிறதா? அரசு சொல்கிறதா என்ற கவலை இல்லை. தேர்தல் ஆணையமாவது இதை வெளிப்படுத்தவேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு வெளிப்படைத் தன்மையோடு இல்லை. பலமுறை கோரிக்கை வைத்து எந்த பதிலும் இல்லை. அதனால் தான் நீதிமன்றத்தை நாட வேண்டி உள்ளது. நீதிமன்றம் மூலமாக நியாயத்தை நிலை நாட்டவேண்டும். தேர்தலை நிறுத்துவதற்காக நாங்கள் நீதிமன்றம் செல்லவில்லை. 12,500க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தை கூட்டியவர்கள் நாங்கள். மனுக்களும் நாங்கள் தான் பெற்றுள்ளோம்.

ஆகவே தேர்தல் நடத்த வேண்டும் என நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஒருவேளை சட்டத்தை மீறி விதிகளுக்கு அப்பாற்பட்டு தேர்தல் நடத்தும் சூழல் வந்தால் கூட அதை சந்திப்பதற்கு திமுக தயாராக உள்ளது” என்றார். நிகழ்ச்சியின் போது, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, வில்சன், எம்எல்ஏக்கள் பி.கே.சேகர்பாபு, ரங்கநாதன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கிரிராஜன், பகுதி செயலாளர்கள் முரளிதரன், நாகராஜன் மற்றும் தேவஜவகர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : DMK ,elections ,MK Stalin Stalin , Stalin
× RELATED வடமதுரையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்