×

உள்ளாட்சி தேர்தலில் ஊரக பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது எப்படி?

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் ஊரக பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நகர்புறங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமும், ஊரக பகுதிகளில் வாக்குச்சீட்டு முறையிலும் வழக்கமாக தேர்தல் நடத்தப்படும். இந்த நடைமுறையின்படி நகர்ப்புறங்களில் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடத்துவதற்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு முதல் கட்ட சோதனை நடத்தப்பட்டது. இதன்பிறகு அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு வெள்ளை அல்லது நீல நிற வாக்குச்சீட்டும், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டும், பஞ்சாயத்து யூனியன் உறுப்பினர் பதவிக்கு பச்சை நிற வாக்குச்சீட்டும், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிற வாக்குச்சீட்டும் பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஊரகப் பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த அனுமதி அளித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த அவசர சட்டத்தின்படி ஊரகப் பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தில் திருத்தம் செய்து உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் வடிவம், வாக்குப்பதிவிற்கு தயார் செய்யும் முறை, வாக்குச்சாவடியில் தேவையான வசதிகளை ஏற்படுத்துதல், வாக்காளர்களை வாக்களிக்க அனுமதித்தல், பெண் வாக்காளர்களுக்கான வசதியை ஏற்படுத்துதல், வாக்காளர்களை அடையாளம் காணுதல், வாக்காளர்களின் அடையாளம் தொடர்பாக வாக்குச்சாவடி முகவர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு தீர்வு காணுதல், வாக்குப்பதிவு பணிகளை மேற்கொள்ளுதல், வாக்குப்பதிவு பதிவை ஒத்திவைத்தல், வாக்குப்பதிவை நிறைவு செய்தல், பதிவு செய்யப்பட்ட வாக்குகளை சர்பார்த்தால், வாக்கு எண்ணுதல், எண்ணிக்கை முடிந்த பிறகு இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மேலும் வாக்காளர்களின் வருகையை பதிவு செய்தல், பதிவான வாக்குகள் தொடர்பான அறிக்கை தயார் செய்தல், வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவு அறிவித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளின் அளிக்க வேண்டிய படிவங்களின் மாதிரி வடிவங்களும் வெளியிடப்பட்டுள்ளன. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தும் போது பின்பற்றப்படும் வழிமுறைகள்தான் உள்ளாட்சி தேர்தலிலும் பின்பற்றப்படுகிறது.

Tags : areas ,elections , Polling
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்