தமிழகத்தில் 12,524 ஊராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்டு 6 ஆண்டாகியும் பூட்டிக்கிடக்கும் பொது சேவை மைய கட்டிடங்கள்

சத்தியமங்கலம் : தமிழகத்தில் 12,524 ஊராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்டு 6 ஆண்டு ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் பொது சேவை மைய கட்டிடங்கள் பூட்டியே கிடக்கின்றன. தமிழகத்தில் மொத்தம் 12,524 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து குக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு இ-சேவை கிடைக்க ரூபாய் 16 லட்சம் செலவில் கிராம ஊராட்சி சேவை மையத்திற்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன. நகரத்தில் உள்ள அனைத்து மக்களும் பெறும் வசதியை கிராம மக்களும் பெறவேண்டும் என்றதான் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.  இந்த பொது சேவை மையத்துக்கு அதிவேக இணையதள வசதியுடன் இயங்கும் கணினி, பிரிண்டர் உள்ளிட்ட சாதனங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஒரு ஊராட்சிக்கு ₹16 லட்சம் வீதம் 12,524 ஊராட்சிகளில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் மதிப்பு மட்டும் ₹2 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.  
இந்த கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு 6 ஆண்டு ஆகியும் இதுவரை கிராம சேவை மையத்திற்கு பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.

தற்போது, பொது சேவை மையத்திற்கான அனுமதி தனியார் கணினி மையங்களுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால், கிராம ஊராட்சிகளில் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ள கிராம பொது சேவை மையங்கள் பயன்பாடின்றி பூட்டிக்கிடப்பதால் ஆன்லைன் சேவைகள் இதுவரை கிராம மக்களுக்கு சென்றடையவில்லை.  உள்ளாட்சி தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்பட உள்ள நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் உள்ள கிராம சேவை மைய கட்டிடங்களை திறந்து பணியாளர்களை நியமித்து அனைத்து இ-சேவைகளும் கிராம மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே தமிழகத்தில் உள்ள அனைத்து குக்கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Tags : buildings ,Tamil Nadu , Public service center, buildings ,Tamil Nadu with 12,524
× RELATED ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற ஒரு வாரம் கேடு