×

தகுதியானவர்களின் உரிமையை பறித்து பின் வாசல் வழியாக பணி நியமனம் கூடாது: அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: ஒப்பந்தப் பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கி, பின்வாசல் நியமனங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம், வேதாரண்யத்தில் மேற்கொண்ட ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒப்பந்த பணியாளர்கள் தமிழ்வேந்தன் உள்ளிட்ட 33 பேர் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2003 முதல் 2008 வரை பணியாற்றியுள்ளோம். 24 மாதங்களில் 480 நாட்கள் பணியாற்றியுள்ளதால், தங்களுக்கு பணிநிரந்தரம் வழங்கும்படி தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துமாறு தமிழ்நாடு குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அளித்த உத்தரவு வருமாறு: குடிநீர் மற்றும் வடிகால் வாரிய சட்டத்தில் தனி பணி விதிகள் உள்ளன. தமிழ்நாடு தொழில் அமைப்புகள் பணிநிரந்தரம் குறித்த சட்டத்தின் அடிப்படையில் ஒப்பந்தப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய உத்தரவிட முடியாது. ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள் பணிநிரந்தரம் கோர முடியாது. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு 480 நாட்கள் பணியாற்றியுள்ளார்கள் என்பதற்காக மட்டும், ஒப்பந்தப் பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் வழங்க முடியாது. அவர்களுக்கு பணிநிரந்தரம் வழங்குவது என்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. அரசு அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் பணிகளுக்காக தினக் கூலி அடிப்படையில், தங்களுக்கு விருப்பப்பட்டவர்களை, தேர்வு விதிகள், இடஒதுக்கீட்டு நடைமுறைகள் பின்பற்றாமல் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்துகிறார்கள். இவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கி, பின்வாசல் நியமனங்கள் மேற்கொள்வது, தகுதியான விண்ணப்பதாரர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும். அரசியல் சாசனத்தின்படி, வேலைவாய்ப்பில் சம வாய்ப்பை உறுதி செய்வதற்காக, ஒப்பந்தப் பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கி, பின்வாசல் நியமனங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : High Court , High Court
× RELATED ராஜினாமா செய்யாமல் வேட்புமனு தாக்கல்...