போக்குவரத்தை சீர்செய்யும் 82 வயது முதியவர் : தள்ளாடும் வயதிலும் பொது சேவை

கோவை : கோவை ரயில் நிலையம் முன்பு தினசரி அதிகாலை நேரங்களில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் 82 வயதான முதியவர் ஈடுபட்டு வருகிறார். தள்ளாடும் வயதிலும் அவருடைய பொது சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர். கோவை ரயில் நிலையம் முன்பு அமைந்துள்ள ரோட்டில் முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் ரயில் நிலையத்தின் முன்பு பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். இதனால் அங்கு தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். இந்நிலையில், ரயில் நிலையம் முன்பு அதிகாலை 4.30 மணி முதல் காலை 10 மணி வரை ஒரு முதியவர் கடந்த பல ஆண்டுகளாக ரோட்டில் நின்று கொண்டு, வாயிலில் விசிலை வைத்து ஊதி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகிறார்.

போலீஸ் இல்லாத நேரங்களில் அவரது சேவை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் பேருதவியாக உள்ளது. அவரது சேவையை காவலர்களும், பல்வேறு அமைப்பினரும் பாராட்டி வருகின்றனர். இது குறித்து அவர் கூறுகையில், எனது பெயர் சுல்தான். 82 வயதாகிறது. மகன் பன்னிமடையில் வசிக்கிறார். மகள் கவுண்டம்பாளையத்தில் வசிக்கிறார். எனது மனைவி இறந்துவிட்டார்.  நான் எனது மகன், மகள் வீட்டிற்கு செல்வதில்லை. பல ஆண்டுகளாக கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள அத்தர் ஜமாத்தில் இரவு தங்கி வருகிறேன். காலை நேரத்தில் ரயில் நிலையம் முன்பும், பின்னர் உக்கடம் பகுதியிலும், மாலையில் பள்ளிகள் முன்பும், இரவு மீண்டும் ரயில் நிலையம் முன்பும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் தன்னார்வமாக ஈடுபட்டு வருகிறேன். கடந்த 15 ஆண்டுகளாக இதனை செய்து வருகிறேன்’ என்றார்.

Related Stories:

>