சீறிப்பாய்ந்து சுழன்ற கில்லி...கோலி....காணாமல் போச்சு பாதை மாறிப்போன பாரம்பரிய விளையாட்டுகள்

வீரமும்,  விளையாட்டும் பழந்தமிழர்களின் உதிரத்தில் கலந்த ஒன்றாகவே கருதப்படுகிறது.  பிறந்த குழந்தை முதல் வயோதிகர்கள் வரை அவரவருக்கு  ஏற்றாற் போல, அன்றைய காலத்து விளையாட்டுகள் அமைந்தன. குழந்தைகள் கற்கும் முதல்  விளையாட்டு, தங்களது பெற்றோரிடமிருந்து தான். அந்த வகையில், பருப்பு  கடைதல், தென்னமரத்து விளையாட்டு, தட்டலங்கா-குட்டலங்கா, வினா எழுப்பி விடை  சொல்லுதல், சீப்பு விளையாட்டு, வார்த்தை உச்சரிப்பு விளையாட்டு என 15க்கும்  அதிகமான விளையாட்டுகள் இருந்தன. சிறுவர்களுக்கு பில்லுகுச்சி,  காக்கா கம்பு, நெல்லிக்காய் விளையாட்டு, ஓடுகுச்சி, உப்பு விளையாட்டு,  நிலாப்பூச்சி, காத்தாடி, 5 பந்து, பம்பரம் என 60 வகையான விளையாட்டுகளும்,  சிறுமிகளுக்கு ஒன்னாங்கிளி, கண்கட்டி வித்தை, தந்தி போகுது-தபால் போகுது,  மோர் விளையாட்டு, சோற்றுப்பானை, கும்மி என 32 வகையான விளையாட்டுகளும்  வழக்கத்தில் இருந்தது. இதேபோல் ஆடவர்களுக்கு ஜல்லிக்கட்டு, சடுகுடு, பரிவேட்டை, சிலம்பம், இளவட்டக்கல், உறிமரம் ஏறுதல், 15ம் புலி,  நட்சத்திர விளையாட்டு, தாயம், பானை உடைத்தல் என 35 வகையான விளையாட்டுகள் இருந்தன. பெண்களுக்கு தாயம் (இதில், 4 கட்டை, 8 கட்டை, தஞ்சாவூர் கட்டை என 5 வகைகள்  உள்ளன), பல்லாங்குழி, தட்டாங்கல், மஞ்சள்நீர் தெளிப்பு, வட்டாட்டம்,  தானியக் காய்களை வைத்து விளையாட்டு என 15 வகையிலான விளையாட்டுகளும்  இருந்தன.

சிறுவர், சிறுமியர் இணைந்து விளையாட நொண்டி,  உயிர்கொடுத்தல், குரங்கு விளையாட்டு, கண்ணாமூச்சி, பூப்பறிக்க வருகிறோம்,  கோலிக்குண்டு, 4 மூலைக்கல், எலியும், பூனையும், கொலை, கொலையா  முந்திரிக்கா, பூ, பூ புளியம்பூ என எண்ணிலடங்கா விளையாட்டுகள் இருந்தது. இவை  அனைத்தும் தொன்றுதொட்டே இருந்து வருவதை தொல்காப்பியம், திருக்குறள் என  பல்வேறு இலக்கியங்களிலும் நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் வீர விளையாட்டுகளை விலங்குகளை அடக்குதல்  (ஜல்லிக்கட்டு), தனித்திறனை வெளிப்படுத்துதல் (இளவட்டக்கல்), இருவர் இடையே  போட்டி (மல்யுத்தம்) என வகைப்படுத்தலாம். இதில் இளவட்டக்கல் என்பது, தனது  முறைப்பெண்ணை கரம்பிடிக்க, முறை மாமன்களுக்கு நடத்தப்படும் ஒரு விளையாட்டு  ஆகும். பல்லாங்குழி ஆட்டம் என்பது, பெண்களுக்கான பிரத்யேகமான  ஆட்டமாக பார்க்கப்படுகிறது. எதிர்பாண்டி, ராஜபாண்டி என 4 வகைகளில், இது  விளையாடப்பட்டது. சேமிப்பு பழக்கத்தை உருவாக்கவும், எதிர்கால தேவை,  வரவு-செலவுகளை கணக்கிட்டு பெண்கள் குடும்பத்தை வழிநடத்தவும் இந்த  விளையாட்டு அவர்களுக்கு உதவிகரமாக இருந்தது. பல்வேறு சிறப்புகளை கொண்ட  பாரம்பரிய விளையாட்டுகள் அனைத்தும், காலப்போக்கில் காணாமல் போய்விட்டது வேதனைக்குரியது.

இந்த விளையாட்டுகள் அனைத்தும்  அறிவு வளர்ச்சி, உடல் வளர்ச்சி, புரிந்து கொள்ளுதல், வாழ்வியல் முறையை  உணர்த்துதல், மொழி வளர்ச்சி, சமூக வளர்ச்சி, விட்டு கொடுத்தல்,  விருந்தோம்பல் பண்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டன. இவை  அனைத்தையும், குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலமாக வழங்கினோம். ஆனால் தற்போதைய விளையாட்டுகளில் குழந்தைகளின்  மன  வளர்ச்சி, உடல் வலிமையை போற்றும் அம்சங்கள் எதுவும் இல்லை. கார்ட்டூன்   கதாபாத்திரங்களை உருவாக்கி, குழந்தைகளை எப்போதும் அதன் அடிமையாக வைத்துள்ளனர். தற்போது மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்ளாத ரோபோக்களாக குழந்தைகள்  மாறி வருகின்றனர். தன் ெசயல்களை தாங்களே நிர்ணயிக்கும் நிலையை  இழக்கின்றனர். இது ஒரு மனித குலத்தின் தீவிரவாதம் என கூறும் அளவிற்கு  வளர்ந்துவிட்டது. கற்றல் பாதிப்புகள், கவனச் சிதறல், குற்றங்களில் ஈடுபாடு,  நிலையற்ற வாழ்க்கை, தோல்வியால் துவண்டுவிடும் மனப்பான்மை, போதைப்பொருள்  பயன்பாடு, வலிமையற்ற மனம் என படிப்படியாக அதிகரித்து, இதயமற்ற மனநோயாளியாக  மாற்றுகிறது.  

இதற்கு பெற்றோரும், ஆசிரியர்களும் முக்கியமான காரணம்  என்றால் அது மிகையல்ல. அவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுகள் பற்றிய அக்கறை  இல்லாதது ஒரு காரணம். அதோடு, குழந்தைகளை அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப அனுமதித்ததால்,  இந்த  அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பெற்றோரும், ஆரம்ப கல்வி அளிக்கும்  ஆசிரியர்களும், குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி, பாரம்பரிய  விளையாட்டுகளை கற்றுத்தர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குழந்ைதகள்  நல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

காலை எழுந்தவுடன் படிப்பு...பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு... மாலை முழுவதும் விளையாட்டு.. இதை வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா’ என்று மீசையை முறுக்கினார் முண்டாசுகவி பாரதி. அவரது வாக்குப்படி சிட்டுக்களாய் வட்டமடித்து, வீதியெங்கும் கொட்டமடித்து, வெயிலோடு உறவாடி, வியர்வையில் நீராடிய குழந்தைகள் நம்மில் 60, 70, 80களில் பிறந்தவர்கள். இதனால் நமது உடலோடு உள்ளமும் வலுப்பெற்றது. ஆனால் இப்போது நமது வாரிசுகளுக்கோ, பூட்டிய அறையும், ஆன்ட்ராய்டு செல்போன்களும், அதில் வரும் நூதன விளையாட்டுகளுமே உலகம். அந்த உலகத்தில் புளூவேல், பாப்ஜி என்று பதறவிடும் அவலங்கள் தாராளம். இதனால் மனம் தளர்ந்து, உடல் நலிந்து அவர்கள் படும் அவஸ்ைதகள் ஏராளம். இதை கட்டுப்படுத்த புதிய உலகம் மறந்து பழைய உலகத்தின் பாதைகளில் தினமும் சற்று ேநரம், அவர்களை பயணிக்க வைக்க ேவண்டியது இங்கே அவசியம் மட்டுமல்ல.... அவசரமும் கூட...  

உயிரை பறிக்கும் விபரீத கேம்கள்

உலகம்  முழுவதும் சமீபத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது ப்ளுவேல் என்ற விபரீத விளையாட்டு. இந்த விளையாட்டு குழந்தைகள் மட்டுமின்றி இளைஞர்களிடமும் வேகமாக  பரவி, உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் சிறிய, சிறிய சாகசங்களைச் செய்யச் சொல்லி, விளையாடுபவர்களை ஊக்கப்படுத்தும். அப்போது அவர்களை பற்றிய  அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொண்டு, விபரீத கட்டளைகளை நிறைவேற்ற அறிவுறுத்தும். இதனை செய்யமறுத்தால், அவர்களின் விவரங்களை வெளியிடப்படும் என மிரட்டல் விடுத்து பல்வேறு உயிர்ப்பலிகளை ஏற்படுத்தியது. தற்போது அந்த கேம் தடை செய்யப்பட்டிருந்தாலும், அதுபோன்ற பல கேம்கள், இன்றும் நடைமுறையில் இருப்பது வேதனை.

சமூகம் சார்ந்தே இருந்தது

பாரம்பரிய  விளையாட்டுகளை பொறுத்தவரை எல்லா விளையாட்டுகளும், எல்லா இடங்களிலும்  இருந்தது என்று கூறுவதிற்கில்லை. ஏனெனில் இந்த விளையாட்டுகள் அனைத்தும் சமுதாய பழக்க வழக்கங்கள், மொழி வளர்ச்சி, வாழ்வியல் தொடர்பான நிகழ்வுகள், இயற்கை  அமைப்பு, புவியமைப்பு, தட்பவெப்ப தன்மை மற்றும் சூழ்நிலைகளை பொறுத்து  உருவானவை. ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்தவாறு விளையாட்டின் தன்மைகள் மாறுபட்டு, உருவாகியது என்கின்றனர் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளவர்கள்.

Tags : Gilly , Traditional games , trajectory ,disappearance
× RELATED பொங்கல் விளையாட்டுவிழா