×

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரம்: தமிழகம் முழுவதும் பலத்த மழை

சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்; டெல்டா மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நேற்று பல இடங்களில் பலத்த மழை பெய்தது. ஒரு லட்சம் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன் வெப்பசலனம் காரணமாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பதிவானது. தாம்பரத்தில் அதிகபட்சமாக 15 செ.மீ மழை பெய்தது. இதனால் தமிழகத்தில் ஏரிகள், குளங்கள், வேகமாக நிரம்பி வருகின்றது. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் குமரிகடல் முதல் தென்கிழக்கு வங்கக்கடல் வரை நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நேற்று தமிழகம் முழுவதும் நல்ல மழை பதிவானது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது: குமரி கடல், அதை ஒட்டிய வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறுவதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் பெரும்பாலான மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் டிச.1ம் தேதி(இன்று) கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும்.

குறிப்பாக திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார். தென் மாவட்டங்களில்: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்மழையால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பாபநாசம், சேர்வலாறு அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியது. பாபநாசம் அணையில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு 14 ஆயிரத்து 204 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்காரணமாக முண்டந்துறை ஆற்றை கடந்து செல்லும் இரும்புப் பாலத்தை மூழ்கடித்துக்கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பாபநாசம் கோயில் முன்பு உள்ள படித்துறை, பிள்ளையார் கோயிலை மூழ்கடித்துக் கொண்டு வெள்ளம் சென்றது. மேலும் பாபநாசம் வனச்சோதனை சாவடி மூடப்பட்டுள்ளது. களக்காடு பகுதியில் விடிய, விடிய பெய்த மழையால் நாங்குநேரியான் கால்வாய், பச்சையாறு, உப்பாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. களக்காடு - தலையணை செல்லும் சாலையில் உள்ள பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் அங்கு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக சிவபுரம், வனத்துறை அலுவலகங்கள், ஊழியர்கள் குடியிருப்பு, தலையணை பகுதிகள் துண்டிக்கப்பட்டன.

தென்காசி மாவட்டம், கடனாநதி அணையும் நிரம்பி வழிவதால் அந்த அணையில் இருந்து திறக்கப்படும் 620 கன அடி நீரும் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இத்துடன் காட்டாற்று பகுதிகளில் இருந்து ஓடி வரும் வெள்ள நீரும் தாமிரபரணி ஆற்றில் கலப்பதால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், குறுக்குத்துறை முருகன் கோயில், தைப்பூச மண்டபம் ஆகியவை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன.வெள்ளம் காரணமாக தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் கைலாசபுரம், சிந்துபூந்துறை, அண்ணாநகர் ஆகிய பகுதி மக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதுதவிர, குற்றால அருவியில் 2வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி முடங்கியது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாகை மாவட்டத்தில் நீலாயதாட்சியம்மன் கோயில் பிரகாரத்தில் மழை நீர் தேங்கியதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யமுடியாமல் சிரமம் அடைந்தனர். வேளாங்கண்ணி பேராலயம் செல்லும் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியது. தொடர்மழையால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது. மேலும், கடல் சீற்றம் காரணமாக டெல்டா மாவட்டத்தில் 1 லட்சம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தஞ்சை மாவட்டத்தில் மல்லிப்பட்டிணம் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கும்பகோணத்தை அடுத்த சுந்தரபெருமாள்கோயிலில் கமலா, புனிதா, மங்கையர்க்கரசி ஆகிய 3 பேரின் வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது. பாபநாசம் அருகே கறம்பை தெற்கு தெருவை சேர்ந்த துரைகண்ணு(65) என்பவரின் வீட்டின் ஓடு நேற்று முன்தினம் இரவு சரிந்து விழுந்தது. இதில், இடிபாட்டுக்குள் சிக்கி துரைகண்ணு பலியானார். திருவிடைமருதூர் அருகே அணக்குடி கிராமத்தில் பழவாற்றில் கிராம மக்கள் சென்று வரும் வகையில், தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. மழையினால், தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. கடலோர பகுதிகளில் உள்ள 34 மீனவ கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சேதுபாவாசத்திரம் பகுதியில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் 10 ஆயிரம் பேர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு 2 மணி முதல் மிதமான மழை பெய்ய தொடங்கி விடிய விடிய கொட்டித்தீர்த்தது. முனியன்குறிச்சியில் சாமிகண்ணு மகள் பூங்கோதை(35, திருமணமாகாதவர்) பக்கத்துக்கு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது பூட்டி கிடந்த சகுந்தலா என்பவரது வீட்டின் சுவர் இடிந்து பூங்கோதை மீது விழுந்தது. இதில் அவர் பலியானார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை வடக்கு தெருவில் வசிப்பவர் ரவி (50) விவசாயி. இவர் நேற்று காலை சிறுநீர் கழிப்பதற்காக வீட்டிற்கு அருகே சந்து பகுதிக்கு செல்லும்போது திடீரென வீட்டின் சுவர் இடிந்து ரவி இறந்தார்.

ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் அதிகாலை தொடங்கிய மழை நேற்று முழுவதும் பெய்தது. மழையால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நான்கு ரத வீதிகள், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ராமநாதபுரம் அருகே பேராவூர் பகுதியில் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் கடலில் வீசும் பலத்த காற்றால் 7 ஆயிரம் படகுகள் கரை நிறுத்தப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக காரைக்குடி சத்யா நகர், மானகிரி பகுதியில் 8 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. மேலும், இப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இதேபோல், கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், கடலூர், திருச்சி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்தது.

Tags : Bengal Sea , Rain
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9...