×

நக்சல் அச்சுறுத்தல் பகுதியில் பலத்த பாதுகாப்பு: ஜார்கண்ட் சட்டமன்ற முதற்கட்ட தேர்தலில் 62.87% வாக்குப்பதிவு...பெண்கள் அதிகளவில் வாக்களிப்பு

ராஞ்சி: நக்சல் அச்சுறுத்தல் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், ஜார்கண்டில் முதற்கட்ட தேர்தலில் 62.87% வாக்குப்பதிவாகியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில், இன்று முதல் டிச. 20ம் தேதி  வரை 5 கட்டமாக வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றன. அனைத்து வாக்குகளும் டிச. 23ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முதற்கட்டமாக இன்று சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேஹர், பாங்கி, தால்டோகஞ்ச்,  பிஷ்ராம்பூர், சாதாரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் ஆகிய 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மொத்தம் 6 மாவட்டங்களில் உள்ள 13 முக்கியமான தொகுதிகளில் இந்த தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவுக்காக 3,906 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. நக்சல் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு  மையங்கள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பபட்டது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை நிறைவடைந்த முதற்கட்ட தேர்தலில் 62.87 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. பெண்கள் அதிகளவில்  ஓட்டளித்தனர்.

இந்த தேர்தலில், பாஜ தனித்தும், காங்கிரஸ் கட்சி ஜார்க்கண்ட் முன்னேற்ற முன்னணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றன. ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 6,  ஜேஎம்எம் 4, ஆர்ஜேடி 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. பாஜக 12 தொகுதிகளிலும் ஹூசைனியாபாத்தில் வினோத்குமார் சிங்கை ஆதரித்தும் களத்தில் நிற்கிறது. கடந்த தேர்தலில் பாஜகவின் கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஏஜேஎஸ்யூ,  லோகர்தாகாவில் போட்டியிடுகிறது. முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் ஜேவிஎம் தனித்து போட்டியிடுகிறது.

13 தொகுதிகளிலும் 15 பெண்கள் உட்பட 189 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். லோகர்தாகவில் ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் ராமேஸ்வர் ஓரோன் போட்டியிடுகிறார். ஜார்க்கண்ட்டில் மொத்தம் 37,83,055 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.  அதில் பெண் வாக்காளர்கள் மொத்தம் 18,01,356 இருக்கிறார்கள். பாதுகாப்பு கருதி, நக்சல் பிரச்சனை காரணமாகவும் இந்த தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


Tags : Jharkhand ,assembly elections , 62.87% turnout in Jharkhand pre-poll ...
× RELATED இந்தியா கூட்டணியில் இருந்து விலகாததால் சோரன் கைது: கார்கே பேச்சு