×

சேலம் அருகே நடந்த சோதனையில் அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ.1.25 கோடி குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

கெங்கவல்லி: சேலம் அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ.1.25 கோடி குட்காவை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்களான பான்பராக், குட்கா உள்ளிட்டவை தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும், போலீசாரும் கண்காணித்து பிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.நேற்றிரவு, சேலம் மாவட்டம் வீரகனூர் அருகேயுள்ள ராயர் பாளையம் பகுதியில், ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்களை லாரியில் கொண்டு வந்து இறக்குவதாக மாவட்ட எஸ்பி தீபாகனிக்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கும்பலை கூண்டோடு பிடிக்க ஆத்தூர் டிஎஸ்பி ராஜூ தலைமையில் தனிப்படையை எஸ்பி அமைத்தார். அந்த தனிப்படை போலீசார், சம்பவ இடம் சென்று சோதனையிட்டனர். அதில், ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை லாரியில் இருந்து 3 பேர் இறக்கி வைத்துக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைக்க முயன்றபோது 3பேரும் தப்பியோடினர்.

அதில், 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.அவர்கள், ஆத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்த ஜெயந்தாராம் (34), அஜிஜாராம்(28) என்பதும், இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. அந்த வீடு அதிமுக முன்னாள் மாவட்ட பிரதிநிதி குமாரசாமி என்பவருக்கு சொந்தமானதாகும். கடந்த சில மாதங்களாக மளிகை பொருட்களை இறக்கி வைப்பது போல், குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதை புகையிலை பொருட்களை இறக்கி வைத்து, ரகசியமாக பல்வேறு இடங் களுக்கு அனுப்பி விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது.இதையடுத்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவனுக்கு தனிப்படை போலீசார் தகவல் கொடுத்தனர். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிங்காரவேல், ரமேஷ் ஆகியோர் சென்று, வீடு மற்றும் லாரியில் இருந்த போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதில், லாரியில் இருந்து 40 மூட்டையும், வீட்டிற்குள் இருந்து 100 மூட்டையும் என 140 மூட்டை போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுபோக வீட்டிற்குள் தனியாக 100 பாக்ஸ்களில் குட்கா பவுடர் அடைத்து வைத்திருந்தனர்.

அந்த பாக்ஸ்களின் ஒவ்வொன்றிலும், 5 கிராம் எடை கொண்ட வெள்ளிக்காசும் இருந்தது. மொத்தமாக 100 பாக்சில் இருந்து அரை கிலோ வெள்ளிக்காசு சிக்கியது. ஒட்டுமொத்தமாக பறிமுதல் செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்களின் மதிப்பு ₹1.25 கோடியாகும். இவை அனைத்தையும் அதிகாரிகள், வீரகனூரில் உள்ள ஒரு திருமண மண்ட பத்திற்கு கொண்டுச் சென்றனர். இதன்பிறகு பிடிபட்ட 2 பேரிடம் நடத்திய விசாரணையில், இந்த போதை புகையிலை பொருட்களை ஐதராபாத்தில் இருந்து திருச்சிக்கு கொண்டு சென்று, பின்னர் அங்கிருந்து வீரகனூருக்கு கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த குட்கா பதுக்கலில் அதிமுக பிரமுகருக்கு எத்தகைய தொடர்பு உள்ளது என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags : Salem ,residence ,Amritsar ,raid ,Manmohan Singh ,house , Rs. 1.25 crore ,seized , PM Manmohan Singh,raid near Salem,2 arrested
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை