×

கோமுகி அணை 2வது முறையாக நிரம்பியது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சின்னசேலம்: கோமுகி அணை 2வது முறையாக நிரம்பியதால்  300கனஅடி உபரி நீர் கோமுகி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் கல்வராயன்மலையில் கனமழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ள அபாயம் உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் கல்வராயன் மலையடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து உற்பத்தியாகும் கோமுகி ஆறு கள்ளக்குறிச்சி வழியாக பாய்ந்தோடி, கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் மணிமுக்தா நதியுடன் கலக்கிறது. இந்த கோமுகி ஆற்றின் குறுக்கே செம்படாகுறிச்சி, சோமண்டார்குடி உள்ளிட்ட 11 இடங்களில் அணைக்கட்டுக்கள் கட்டப்பட்டுள்ளது. கோமுகி ஆற்று நீர் 40 ஏரிகளுக்கு தண்ணீர் சென்று அதன்மூலம் 5860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

அதுமட்டுமில்லாமல் புதிய கால்வாய் பாசனத்தின்மூலம் மன்மலை, மாத்தூர், கரடிசித்தூர், மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் சுமார்  5000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.  வடகிழக்கு, தென்மேற்கு பருவமழையின்போதும்,  கல்வராயன்மலையில் அதிக மழைபொழியும் காலங்களிலும் அணையில் நீர் சேமிக்கப்பட்டு  ஒவ்வொரு ஆண்டும் பாசனத்திற்காக அக்டோர் மாதம் திறந்து விடப்படுவது வழக்கம். இந்நிலையில் கல்வராயன்மலையில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால்  கல்வராயன்மலையில் இருந்து கல்பொடை, பொட்டியம், மாயம்பாடி  ஆறுகளில்  இருந்து கோமுகி அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாகவே உள்ளது. இம்மாத துவக்கத்தில் அதிகபட்சமாக 2000 கனஅடி நீர்வரத்து இருந்தது. இதனால் இம்மாத துவக்கத்திலேயே  அணை நிரம்பியதால் கடந்த 8ம் தேதி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அதாவது ஆற்றிலும், பாசன கால்வாயிலும் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 43அடியாக சரிந்தது.

இந்நிலையில்  கல்வராயன்மலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும்  கனமழையின் காரணமாக அணைக்கு வினாடிக்கு சுமார் 500 கனஅடி நீர்வரத்து இருந்தது. இதனால் 43 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் திடீரென 44 அடியாக உயர்ந்து தற்போது 2வது முறையாக அணை நிரம்பியுள்ளது. மேலும் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால் ஆற்றில் 300 கனஅடி உபரி நீரை திறந்து விட்டுள்ளனர். மேலும் கோமுகி அணை நிர்வாகத்தினர் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அபாய சங்கு ஒலித்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags : Komukhi Dam ,residents , Komukhi Dam , 2nd time, Flood warning,coastal residents
× RELATED சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை...