×

சுருளி அருவியில் நடக்கும் வசூல் வேட்டை ரத்தாகுமா?

கம்பம்: கம்பம் அருகே சுருளி அருவியில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக நடக்கும் வசூல் வேட்டை தொடர்கிறது. இதனை ரத்து செய்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  இன்று நடக்கும் சாரல் விழாவில் அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. முப்பத்து முக்கோடி தேவர்கள், எண்ணற்ற ரிஷிமார்கள் தவம் இருந்த புண்ணியதலமாக போற்றப்படும் சுருளிஅருவி வரலாற்று சிறப்புடையது. இங்குள்ள பூதநாராயணன் கோயில், சுருளி வேலப்பர் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில் போன்றவற்றில் தினந்தோறும் பக்தர்கள் குவிகிறார்கள். அமாவசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு வரக்கூடிய பக்தர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் உயர்ந்து வருகிறது. சபரிமலை சீசன் காலங்களில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்தை முடித்துவிட்டு இங்கு நீராடிவிட்டு செல்வார்கள். மேகமலை வன உயிரின சரணாலய கட்டுப்பாட்டில் வரக்கூடிய சுருளிஅருவியில் கடந்த 2018ம் வருடம் முதல்  திடீரென குளிக்க செல்பவர்களுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த வசூல் பக்தர்கள் மட்டும் அல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தியை உண்டாக்கியது.

இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தன. திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் போராட்டத்தை முன் எடுத்தன. கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் குளிப்பவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டணமாக ரூ.30 ஆக உயர்த்தப்பட்டது. இதில் குழந்தைகளுக்கு ரூ.20, வெளிநாட்டைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ரூ.200 மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பெரியவர்களுக்கு ரூ.300,  அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.5, தனியார் பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.20, வெளிநாடுகளாக இருந்தால்  ரூ.50 மற்றும் ரூ.200 வசூலிக்கப்படுகிறது. கேமராக்களை கொண்டு செல்ல ரூ.50, வெளிநாட்டவர்களுக்கு ரூ.3ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.

இதேபோல் வாகனங்கள் உள்ளே நுழைந்திட சுருளிப்பட்டி ஊராட்சியில் இருந்து டூவீலருக்கு ரூ.10, கார்களுக்கு ரூ.40, பஸ்களுக்கு ரூ.100 வரையிலும் இஷ்டத்திற்கு வசூலிக்கப்படுகிறது. இதனால் சுருளி அருவி என்றாலே கட்டண கொள்ளையா என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் உண்டாகி உள்ளது. எனவே, நுழைவு கட்டணம் மற்றும் குளிக்க செல்பவர்களுக்கு வாங்கும் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இந்நிலையில் இன்று (நவ.30) சாரல் விழா நடக்கிறது. இதிலாவது தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கட்டண உயர்வை ரத்து செய்து அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அதிருப்தி தணியுமா?
சுருளி அருவியில் வனத்துறை, உள்ளாட்சித்துறை ஆகியோரால் தொடர்ந்து நடத்தப்படும் கட்டண உயர்விற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அமாவாசை நாட்களில் குவியும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்ய வேண்டும். பேட்டரிகார் இலவசமாக இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து போராட்டங்கள் பல நடந்துள்ளன. கடந்த வருடம் ரூ.5 மட்டுமே வாங்கப்பட்ட குளியல் கட்டணம் இந்த வருடம் ரூ. 30 ஆகி உயர்ந்துள்ளது. இதனை ரத்து செய்யாமல் சாரல்விழா நடத்துவது ஓ.பன்னீர்செலவ்ம்  மீது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது.


Tags : Shirley Falls , collection,Shirley Falls , canceled?
× RELATED கார், வேன் மோதி தீப்பிடித்து எரிந்தது