×

சரித்திரத்தின் மறுபெயர் சர்ச்சில்

வின்ஸ்டன் சர்ச்சில்... உலக மக்கள் அதிகம் அறிந்த பெயர். கவிதை, பேச்சு, போர் தந்திரம், பிரதமர் என தன்னை படிப்படியாக உயர்த்திக் கொண்டவர். இன்று அவருக்கு 145வது பிறந்தநாள். அவரை பற்றி தெரிந்து கொள்வோமா? இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷைர் நகரில் 1874, நவம்பர் 30ம் தேதி ரான்டால்ப் சர்ச்சில் - ஜெனி ஜெரோம் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் வின்ஸ்டன் லியானோர்ட் ஸ்பென்சர் சர்ச்சில். வசதியான குடும்பத்தில் பிறந்தவர். இளம்வயதில் பெரும்பாலும் பணியாட்களுடனே வாழ நேரிட்டதால், பெற்றோரிடம் நெருக்கம் இல்லாதவராகவே வாழ்ந்தார் சர்ச்சில். போர்டிங் வசதியுள்ள பள்ளியில் படித்ததால், படிப்பில் சுமாராகவே இருந்தார். இருப்பினும் கவிதை, வரலாற்று புத்தகங்களைப் படிப்பது, எழுதுவது உள்ளிட்ட பழக்க, வழக்கங்களில் ஆர்வமாக இருந்தார்.

பின்னர் பிரிட்டனில் உள்ள ராயல் மிலிட்டரி கல்லூரியில் சேர்ந்தார். அங்கு போர் மற்றும் வெளிநாட்டு தொடர்பு சம்பந்தப்பட்ட நுணுக்கங்களை நேரடியாக கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை தெரிந்து கொண்டார். போர் நிகழ்வுகளை தெரிவிக்கும் செய்தியாளராக மாறினார். செய்தி சேகரிப்பு மட்டுமல்லாமல், போர் முனையிலும் தன்னுடைய பங்கை அளித்தார். தென்னாப்பிரிக்காவில் சிறிது காலம் பணிபுரிந்த வின்ஸ்டன் 1900ம் ஆண்டில் மீண்டும் இங்கிலாந்து திரும்பினார். தன்னுடைய மூதாதையர் வழியில், தானும் அரசியலில் இறங்க முடிவு செய்து, நாடாளுமன்ற தேர்தல் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற வின்ஸ்டன், நாடெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது பேச்சாற்றலால் மக்களை கட்டி போட்டார். பின்னர் சில காரணங்களால் லிபரல் கட்சியில் சேர்ந்தார். தொடர்ந்து 1911ம் ஆண்டில் நாட்டின் முதல் ராணுவத் தலைவராக பொறுப்பேற்றார். 1914ம் ஆண்டில் தொடங்கிய முதல் உலகப்போரில், பிரிட்டன் கட்டாயமாகப் பங்கேற்க வேண்டும் என்ற கொள்கையை வலுவாக முன் வைத்து, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட பெருமை இவரையே சேரும். 1917ம் ஆண்டில் மீண்டும் லண்டன் திரும்பிய வின்ஸ்டன், நாடாளுமன்றத்தின் எதிரணியில் அமர்ந்தார். அப்போது அமைந்த கூட்டு அரசில், அமைச்சராக பொறுப்பேற்றார்.

முதல் உலகப் போருக்குப் பின், சர்ச்சில் போர் மீண்டும் எழுவதற்கான வாய்ப்புகளை குறித்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசினார். ஹிட்லரின் எழுச்சி மற்றும் பிரிட்டன் தயாராக இருக்க வேண்டும் என்ற கருத்துகளை முன்வைத்துப் பேசினார். அவர் எச்சரித்தது போல, இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. வின்ஸ்டன் சர்ச்சிலை தலைவராக தேர்ந்தெடுத்தனர். அனைத்து படைகளையும் திரட்டியது மட்டுமின்றி, தன்னுடைய பேச்சாற்றல் மூலம் பிரிட்டன் மக்களின் மனதிலும் தைரியத்தை பிறக்கச் செய்தார் சர்ச்சில்.இரண்டாம் உலகப் போரில் வெற்றியை எட்டினாலும், அடுத்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் சர்ச்சில், லேபர் கட்சிக்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எதிர்க்கட்சித் தலைவராக ஐந்தாண்டு காலம் பணியாற்றிய சர்ச்சில், அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று 1951 முதல் 1955 வரை பிரதமராக பதவி வகித்தார்.

எழுத்துலகில் இவரது சேவைகளை பாராட்டி இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1953ம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது. 1955ம் ஆண்டு வரை பிரதமராகப் பொறுப்பேற்ற இவர், அதன்பின் அரசியல் வாழ்க்கையை விட்டு விலகி இருந்தார். பின்னர் உடல் நலம் பாதித்து ஜன.24, 1965ம் ஆண்டு தனது 90வது வயதில் உயிரிழந்தார். உலகப்போரில் முக்கிய பங்கு வகித்ததன் மூலம் சரித்திரத்தில் இடம் பெற்ற சர்ச்சில் சாகாவரம் எனலாமா?


Tags : Churchill , Churchill's,renamed ,Churchill
× RELATED சர்ச்சில் பஸ் ஊழியர் கொலை தலைமறைவான வக்கீல் சரண்