×

‘சாபாத்’ வழிபாட்டில் பங்கேற்க இஸ்ரேல் நாட்டவர் வருகை: வட்டக்கானலில் போலீஸ் குவிப்பு

*ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஊடுருவும் ஆபத்து?
* கடும் சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதி

கொடைக்கானல் : கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் சாபாத் வழிபாட்டுக்கு இஸ்ரேல் நாட்டவர்கள் வருகை துவங்கியுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அபாயத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களும் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும். குறிப்பாக, இஸ்ரேலிய நாட்டு யூத இன சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதிக்கு அதிகளவில் வந்து செல்வார்கள். இவ்வாறு வருபவர்கள் 3 மாதம் இங்கு தங்கியிருப்பர்.

இவர்கள்  டிச. 25 முதல் ஒரு வாரம் வரை ‘சாபாத்’ எனும் சிறப்பு வழிபாடு நடத்துவர். இதனை நடத்த இவர்களின் மதத்தலைவர் ஒருவர் வந்து செல்வார். கடந்த 2017, ஆக.11ம் தேதி கேரள மாநிலத்தை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மஞ்சித் மெஹபூப், சாலிக் முகமது, ரஷீத் அலி, சக்குவான், ஜசீம், ராம் சத், சஜிர் மங்கலசேரி, மொயின் ஆகிய 8 பேர் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் தங்கி, இங்குள்ள இஸ்ரேல் நாட்டவர்களை கொல்ல திட்டமிட்டது தெரிந்தது.

இதைத்தொடர்ந்து வட்டக்கானல் பகுதியில் நிரந்தர போலீஸ் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன. தற்போது டிசம்பம் மாத பிறப்பையொட்டி கொடைக்கானலில் இஸ்ரேல் நாட்டவர்களின் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட்டக்கானல் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இப்பகுதிக்கு வந்து செல்லும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. இவர்களுடன் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது, ‘‘வட்டக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். வெளிநாடு சுற்றுலாப்பயணிகள் கண்காணிப்பு கேமராக்கள் உள்ள விடுதிகளில்தான் தங்க வேண்டும். அப்படி தங்குபவர்களின் பாஸ்போர்ட், விசா போன்றவற்றை சரிபார்த்து படிவம் ‘சி’ பூர்த்தி செய்து கொடைக்கானல் காவல்நிலையத்தில் விடுதி உரிமையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும். தவறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

இதற்கிடையே கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் சந்தேகப்படும் வகையில் அந்நியர்கள் நடமாட்டம் இருந்தால், கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்துதான் வட்டக்கானல் பகுதியில் கூடுதல் போலீஸ், வாகன சோதனை என பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : nationals ,Israeli ,Police mobilization ,Vattakkanal ,Sabaath Workship Isrel Nationalities ,Kodaikanal , kodaikanal, police checking,Sabaath ,Isrel Nationalities,
× RELATED இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி...