×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா நாளை (ஞாயிற்றுக் கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7.05 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி முன்பு உள்ள 61 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும். விழா நடைபெறும் 10 நாட்களும் பகல், இரவில் உற்சவ மூர்த்திகள் மேளதாளம் முழங்க மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

 முதல் நாளான நாளை பகலில் பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனத்திலும், இரவில் மூஷிகம், மயில், வெள்ளி அதிகாரநந்தி. அம்ச, சிம்ம வாகனத்தில் பவனி நடைபெறும். 2ம் நாளன்று பகலில் விநாயகர், சந்திரசேகரர் தங்க சூரியபிறை வாகனத்திலும், இரவில் பஞ்சமூர்த்திகள் வெள்ளி இந்திர வாகனத்திலும் மாடவீதியில் பவனி வருகிறார்கள். 3ம் நாளன்று பகலில் விநாயகர், சந்திரசேகரர் பூதவாகனத்தில் பவனி வருகிறார்கள்.  அன்று காலை கோயிலில் 1008 சங்காபிசேகம் நடைபெறுகிறது. இரவில் பஞ்சமூர்த்திகள் சிம்மவாகனம், வெள்ளி அன்ன வாகனத்தில் மாடவீதியில் மேளதாளம் முழங்க பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 4ம் நாளன்று பகலில் விநாயகர் மூஷிகம் வாகனத்திலும், சந்திரசேகரர் தங்க முலாம் பூசப்பட்ட நாகவாகனத்திலும், இரவில் பஞ்சமூர்த்திகள் வெள்ளி கற்பகவிருஷம், வெள்ளி  காமதேனு வாகனம், இதர வெள்ளி வாகனங்களில் பவனி வந்து அருள்பாலிக்கின்றனர்.

 5ம் நாளன்று (5ம் தேதி) பகலில் விநாயகர் மூஷிகம் வாகனத்திலும், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனங்களிலும், அன்று இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளிமூஷிகம், வெள்ளி மயில், வெள்ளி பெரிய ரிஷப வாகனங்களில் பவனி வருகிறார்கள். இவ்விழாவின் 6ம் நாளன்று (6ம் தேதி) பகலில் விநாயகர் மூஷிகம், சந்திரசேகரர் வெள்ளி யானையிலும் பவனி வருகிறார்கள். அதைத்தொடர்ந்து 63 நாயன்மார்கள் ஊர்வலமும், அன்று இரவு வெள்ளிரத ஊர்வலமும் நடக்கிறது.
 7ம் நாளன்று (7ம்தேதி) தேர்த்திருவிழா நடைபெறுகிறது. அன்று காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும். விநாயகர், முருகர், அண்ணாமலையார், அம்மன், சண்டிகேஸ்வரர் தேர்கள் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். இதில் அம்மன் தேரை பெண்களே விரதமிருந்து இழுத்து வருவார்கள். இவ்விழாவில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

8ம் நாளன்று பகலில் விநாயகர் மூஷிகம், சந்திரசேகர் குதிரை வாகனத்திலும், அன்று மாலை 4 மணியளவில் தங்கமேருவில் பிச்சாண்டவர் உற்சவம் நடைபெறுகிறது. இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் பவனி வந்து பக்தர்கள் அருள்பாலிப்பர். 9ம் நாளன்று (9ம்தேதி) பகலில் விநாயகர் மூஷிகம், சந்திரசேகரர் புருஷா முனிவாகனத்திலும், அன்று இரவு பஞ்சமூர்த்திகள் கைலாச வாகனம், காமதேனு வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்கள்.
 முக்கிய விழாவான மகாதீபதிருவிழா 10ம் நாளான வருகிற 10ம் தேதி(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயரமலையில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் இணை ஆணையர் இரா.ஞானசேகர் மற்றும் கோயில் நிர்வாகிகள்  செய்து வருகின்றனர்.


Tags : Carnatic Deepa Festival ,Annamalaiyar Temple ,Thiruvannamalai Tiruvannamalai Annamalaiyar Temple ,Karthigai Deepam Festival Will Start , Tiruvannamalai ,Annamalaiyar temple , maha Deepam, Karthigai Deepam,
× RELATED அண்ணாமலையார் கோயில் ஊழியர் விபத்தில் பலி: மாட்டு வண்டி மீது பைக் மோதல்