×

ஐதராபாத் பெண் பலாத்காரம், எரித்துக் கொலை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: ஐதராபாத் கால்நடை பெண் டாக்டரை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத் நரசய்யபல்லி பகுதியைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா, கடந்த 27ம் தேதி இரவு 9.30 மணியளவில் வீட்டுக்கு திரும்பிய போது அவருடைய இருசக்கர வாகனம் பஞ்சராகி விட்டது. அப்போது, தனது தங்கைக்கு செல்போனில் பேசிய அவர், ‘இங்கு நிறைய லாரி டிரைவர்கள் இருக்கிறார்கள். என்னை முறைத்து பார்ப்பதால் பயமாக இருக்கிறது,’ என்று கூறினார். சிறிது நேரத்துக்குப் பிறகு அவருடைய செல்போன் ஆப் ஆகிவிட்டது. மறுநாள் காலை அங்குள்ள பாலத்தின் அடியில் அவர் எரித்து கொல்லப்பட்டு கிடந்தார். அவரை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து, எரித்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.  இந்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பி உள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்திற்கு வளாகத்தில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஐதராபாத்தில் நடந்து போல எதிர்காலத்தில் எந்தவொரு சம்பவமும் நடக்கக் கூடாது என்பதற்காக அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தல் கடிதத்தை மத்திய அரசு அனுப்பி உள்ளது. இந்த பயங்கர சம்பவத்தை செய்த கொலையாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படும். அவர்களுக்கு ஆதரவாக எந்த வக்கீலும் ஆஜராகக் கூடாது,’’ என்றார்.

‘தங்கைக்கு போன் செய்தார்; 100க்கு போன் பண்ணாரா?’

இந்த சம்பவம் தொடர்பாக தெலங்கானா உள்துறை அமைச்சர் முகமது மகமூத் அலி அளித்த பேட்டியில், ‘‘போலீசார் விழிப்புடன் இருந்தும், இந்த சம்பவம் நடந்திருப்பது வருத்தமளிக்கிறது. ஆனால், படிச்ச பெண்ணாக இருந்தும், அவர், 100க்கு போன் செய்து போலீசிடம் உதவி கேட்பதற்கு பதிலாக தங்கைக்கு போன் செய்துள்ளார். அவர் போலீசை அழைத்திருந்தால் அசம்பாவிதமே நடந்திருக்காது. இதைப் பற்றி பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்’’ என்றார். கொடூரமான சம்பவம் நடந்திருக்கும் நிலையில், அமைச்சரின் இந்த பேச்சு பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடத்தப்பட்ட பெண் டாக்டர் பலாத்காரம் செய்து எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். சந்தேகத்தின் பேரில் 4 பேர் பிடிபட்டுள்ளனர்.

Tags : Hyderabad ,gang rape ,murder ,Center , Hyderabad
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணி அபார வெற்றி!.