‘கூட்டணி அமைப்பது கட்சிகளின் விருப்பம்’ சிவசேனா கூட்டணிக்கு எதிரான மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க,  சிவசேனா  - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு புதிய அரசு அமைப்பதில் ஒரு மாத காலமாக இழுபறி நீடித்து வந்தது. இறுதியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பா.ஜனதா தலைமையிலான புதிய அரசு அமைந்தது. பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்நவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

எனினும், தனக்கு பெரும்பான்மை இல்லை என்பதை உணர்ந்த தேவேந்திர பட்நவிஸ் பதவியேற்று 4 நாளில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதற்கிடையே, இம்மாநிலத்தில் புதிய அரசு அமைக்க சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ‘மகா விகாஸ் அகாடி’ என்ற புதிய கூட்டணியை உருவாக்கின. இந்த கூட்டணி அமைக்கப்பட்டதை எதிர்த்து அகில் பாரதிய இந்து மகாசபா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷன் மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பிரமோத் பண்டிட் ஜோஷி ஆஜரானார். அப்போது நீதிபதிகள் கூறுகையில், “ஜனநாயக நாட்டில் தேர்தலுக்கு பிறகு யார் யாருடன் கூட்டணி சேருகிறார்கள் என்பது அரசியல் கட்சிகளின் விருப்பம். அவற்றின் இந்த உரிமையில் நீதிமன்றம் தலையிட முடியாது. இதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர நீதிமன்றங்கள் அல்ல,” என்றனர். அதுபோலவே, தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்கவும் நீதிபதிகள் மறுத்து விட்டனர். இந்த விவகாரத்தில் கோர்ட் உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Related Stories:

>