×

வருமான வரி சோதனையை எதிர்த்து போராட்டம்: சித்தராமையா, குமாரசாமி மீது கர்நாடக போலீஸ் வழக்கு பதிவு

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள மண்டல வருமான வரித்துறை அலுவலகம் எதிரில்  போராட்டம் நடத்திய புகாரில் முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி  உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மக்களவை  தேர்தல் விதிமுறை அமலில் இருந்தபோது கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்,  மஜத முன்னணி தலைவர்கள் வீடுகளில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள்  சோதனை நடத்தினர். இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும்  சோதனையை கைவிடவில்லை. இதில் கொதித்தெழுந்த காங்கிரஸ் மற்றும் மஜத கட்சி  தலைவர்கள் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த  முடிவு செய்தனர். அதன்படி கடந்த மார்ச் 28ம் தேதி பெங்களூரு இன்பென்டரி  சாலையில் உள்ள மண்டல வருமான வரித்துறை அலுவலகம் எதிரில் இரு கட்சிகள்  சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அப்போது முதல்வராக இருந்த  குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா, அப்போது துணை முதல்வராக இருந்த  பரமேஷ்வர், அமைச்சர்களாக இருந்த டி.கே.சிவகுமார், சா.ரா.மகேஷ்,  டி.சி.தம்மண்ணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

போராட்டம் நடத்தியவர்கள்  மீது நடவடிக்கை எடுக்ககோரி வருமான வரித்துறை சார்பில் கமர்ஷியல் தெரு  போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதில் போராட்டம் நடத்திய  அரசியல் கட்சி தலைவர்கள் மீது மட்டுமில்லாமல் பாதுகாப்பு கொடுக்க தவறியாக  போலீஸ் ஐபிஸ் அதிகாரிகள் மீதும் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த புகார்  மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்தனர். போலீசாரின்  மெத்தன போக்கை கண்டித்து வருமான வரித்துறை சார்பில் பெங்களூரு சிட்டி  சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம்,  சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி போலீசாருக்கு  உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை ஏற்று முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா,  குமாரசாமி, ஐபிஎஸ் அதிகாரிகள் சுனில்குமார், ராகுல்குமார், தேவராஜ் உள்பட  19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : Karnataka , Siddaramaiah, Kumaraswamy
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...