×

மகாராஷ்டிரா பாணியில் கோவாவிலும் பாஜ ஆட்சியை கவிழ்க்க ஒன்று சேர வேண்டும்: எதிர்க்கட்சிகள் அழைப்பு

பனாஜி: ‘‘மகாராஷ்டிரா பாணியில் கோவாவில் பாஜ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வியூகம் அமைக்கப்பட வேண்டும்,’’ என கோவா பார்வேர்டு முன்னணியின் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான விஜய் சர்தேசாய் கூறி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு அரசியல் குழப்பத்துக்கு இடையே, இரவோடு இரவாக ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்து விட்டு, பாஜ ஆட்சியை பிடித்தது. ஆனால், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி மூன்றே நாளில் பாஜ ஆட்சியை கவிழ்த்து விட்டு, அங்கு கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்ற விழாவில் பல்வேறு மாநில அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இவ்விழாவில் பங்கேற்ற கோவா பார்வேர்டு முன்னணி கட்சி தலைவர் விஜய் சர்தேசாய், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேல் ஆகியோரை மும்பையில் நேற்று சந்தித்து பேசினார்.
பின்னர் கோவாவின் பனாஜி திரும்பிய அவர் அளித்த பேட்டியில், ‘‘கோவாவில் பாஜ ஆட்சிக்கு முடிவு கட்ட மகாராஷ்டிரா பாணியிலான வியூகம் அமைக்க வேண்டியது அவசியம். மகாராஷ்டிரா பாணியில் பாஜ ஆட்சியை கவிழ்க்க தயாராக உள்ள மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும். கோவா மாநில கட்சிகள் மக்கள் நலனுக்காக பாடுபடுகின்றன. ஆனால், பாஜ முதல்வர் பிரமோத் சாவந்த் சொந்த நலனுக்காக மாநிலத்தின் நலனை அடகு வைக்கிறார். அவரது தலைமையிலான மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும்,’’ என்றார்.

கோவாவில் 40 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு 2017 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பாஜ 13 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜ குறைந்த இடத்தை பெற்றாலும்  சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உதவியுடன் ஆட்சி அமைத்தது. 3 எம்எல்ஏக்களை கொண்ட கோவா பார்வேர்டு முன்னணியின் ஆதரவு பாஜவுக்கு முக்கியமாக தேவைப்பட்டதால் அக்கட்சி தலைவருக்கு துணை முதல்வர் பதவியும், மற்ற 2 எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையிலும் இடம் கொடுத்தது.

இதற்கிடையே, காங்கிரசில் இருந்து பிரிந்த 10 எம்எல்ஏக்கள் கூண்டோடு பாஜவில் இணைந்தனர். இதனால் பாஜவின் பலம் 27 ஆக அதிகரித்ததால், கோவா பார்வேர்டு முன்னணி அமைச்சர்களின் பதவியை பறித்து, புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது. இதனால், பாஜ கூட்டணியில் இருந்து கோவா பார்வேடு முன்னணி சமீபத்தில் வெளியேறியது. தற்போது அம்மாநிலத்தில் பாஜ, 3 சுயேச்சைகள் ஆதரவுடன் 30 எம்எல்ஏக்களையும், காங்கிரஸ் 5, தேசியவாத காங்கிரஸ் 1, கோவார் பார்வேர்டு முன்னணி 3, எம்ஜிபி 1 எம்எல்ஏக்களையும் கொண்டுள்ளன.

‘விரைவில் அதிசயம் நிகழும்’

சிவசேனா கட்சி மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மும்பையில் அளித்த பேட்டியில், ‘‘கோவா அரசியல் நிலவரம் குறித்து சர்தேசாயுடன் ஆலோசனை நடத்தினோம். சர்தேசாய் கட்சிக்கு சிவசேனா துணை நிற்கும். கோவாவில் பாஜவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும். அம்மாநிலத்தில் விரைவில் அதிசயம் நிகழும்,’’ என்றார்.

Tags : Maharashtra ,Goa ,BJP , Maharashtra
× RELATED தேர்தல் பிரசாரத்தில் மயங்கி விழுந்தார் நிதின் கட்கரி