×

13 பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு: ஜார்க்கண்டில் இன்று முதல்கட்ட தேர்தல்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இதில், 13 தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடக்கிறது. ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு 5 கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில், முதல் கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. டிசம்பர் 20ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

முதல் கட்டமாக இன்று நடைபெறும் தேர்தலில் 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், பாஜ, காங்கிரஸ் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 189 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், தற்போது அமைச்சர்களாக உள்ள ராமச்சந்திர சந்திரவன்சி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் ரமேஷ்வர் ஓரன் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். மொத்தம் 37 லட்சத்து 83 ஆயிரத்து 55 பேர் முதல் கட்ட தேர்தலில் வாக்களிக்க தகுதி படைத்துள்ளனர். இதில், 18 லட்சத்து ஆயிரத்து 356 பேர் பெண்கள்.

சத்ரா, கும்லா, பிஷன்பூர், லோகர்டாகா, மனிகா, லேதேஹர், பங்கி, டால்டோன்கஞ்ச், பிஷ்ரம்பூர், சத்தர்பூர், உசேனாபாத், கார்வா, புவனாத்பூர் ஆகிய தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3,906 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 989 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா வசதி பொருத்தி கண்காணிக்கப்படுகிறது.இன்று நடைபெறும் தேர்தலில் பாஜ 12 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எதிர்க்கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜேஎம்எம் 4, காங்கிரஸ் 6, ஆர்ஜேடி 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Tags : Voting ,assembly constituencies ,phase ,elections Election ,Jharkhand , Election
× RELATED வாக்குச்சாவடியில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி