×

மகாராஷ்டிரா கிராமத்தில் அதிரடி: திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தினால் ரேஷன் ‘கட்’

அவுரங்காபாத்: திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துபவரின் குடும்ப ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்று மகாராஷ்டிராவில் உள்ள ஜாரண்டி கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ளது ஜாரண்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 5,000 பேர் வசிக்கிறார்கள். ஜாரண்டி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதியும், போதிய தண்ணீர் வசதியும் இருப்பதாக கிராம பஞ்சாயத்து தலைவர் சமாதான் தயாடே தெரிவித்தார். இருந்த போதிலும் சிலர் இன்னும் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர்.

சிலர் கிராமத்துக்கு செல்லும் சாலையோரத்தை திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என கிராம மக்கள் கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துவோரின் ரேஷன் கார்டுகளை ரத்து செய்வது என்று கிராம பஞ்சாயத்து முடிவு செய்ததுடன் அது தொடர்பான தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியுள்ளது. குடும்பத்தில் ஒருவர் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தினால் கூட, அவரது குடும்பத்தின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்று பஞ்சாயத்து தலைவர் சமாதான் தயாடே தெரிவித்தார். மேலும், பொது இடத்தை கழிப்பறையாக பயன்படுத்துவது பற்றி புகைப்படங்களுடன் அல்லது வீடியோ படங்களுடன் பஞ்சாயத்துக்கு தகவல் தெரிவிப்பவர்களுக்கு வரிச் லுகை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags : Maharashtra Village , Toilet
× RELATED டெல்லி வக்பு வாரிய பணி நியமன முறைகேடு...