×

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் டிச.11ம் தேதி இறுதி விசாரணை

புதுடெல்லி: ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடுவது தொடர்பான வழக்கில் டிசம்பர் 11ம் தேதிக்கு உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடக்கிறது. கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.அப்பாவுவும், அ.தி.மு.க சார்பில் ஐ.எஸ். இன்பதுரையும் போட்டியிட்டனர். இதில், 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடைசி மூன்று சுற்று வாக்குகள் மற்றும் தபால் வாக்குகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, அவற்றை எண்ணியும் முடித்துள்ளது. இந்த முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், “ வழக்கு தொடர்பாக வேண்டுமானால் மனுதாரர் இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக அனுமதி வழங்குகிறோம். இதற்கு அவர் ஒப்புக்கொண்டால் வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டு அங்கு சென்று முறையிடலாம் எனக் கூறினார். இதற்கு இன்பதுரை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தனது வாதத்தில், “எங்களது தரப்புக்கு எதிராக உத்தரவு வந்தாலும் பரவாயில்லை. அதனை நாங்கள் ஏற்கிறோம். இதில் உச்ச நீதிமன்றமே வழக்கை விசாரித்து ஒரு இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இந்த தேர்தல் வழக்கை டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். அன்றைய தினம் இறுதி விசாரணை மேற்கொள்ளப்படும். இதில் வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை இரு தரப்பும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை வரை தற்போதைய நிலையே தொடரும் என்பதால், அதுவரை ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவு வெளியிட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags : Radhapuram ,hearing ,Supreme Court , Ratapuram
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...