×

2 போலி பேஸ்புக் ஐடிக்களில் ‘லவ் டார்ச்சர்’ தேனி காதலனை கொலை செய்ய கூலிப்படை ஏவிய மலேசிய பெண்

போடி: போலி ஐடிக்கள் மூலம் தேனியை சேர்ந்த வாலிபரை காதலித்த மலேசிய பெண், காதலர் திருமணத்துக்கு சம்மதிக்காததால், கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்று உள்ளார். தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த நேரு மகன் அசோக்குமார் (28). எல்எல்பி மாணவர். இவருக்கு பேஸ்புக் மூலமாக மலேசியாவை சேர்ந்த அமுதேஸ்வரியுடன் தொடர்பு ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சாட்டிங் செய்து பேசி வந்துள்ளனர். காதலியை நேரில் பார்க்க அசோக்குமார் விரும்பினார். இதையடுத்து அமுதேஸ்வரி காட்டுநாயக்கன்பட்டிக்கு வந்துள்ளார். அப்போது நேரில் பார்த்த அசோக்குமார், ‘‘குண்டாக, வயதான தோற்றத்தில் இருக்கிறாய். உன்னை எனக்கு பிடிக்கவில்லை’’ என கூறி உள்ளார். இதனால் அமுதேஸ்வரி கோபித்தபடி மலேசியா சென்றார். பின்னர் இருவரும் தொடர்பு கொள்ளவில்லை.

சில நாட்களுக்கு பின், கவிதா என்ற பெயரில் பேஸ்புக்கில் அசோக்குமாரை தொடர்பு கொண்ட ஒரு பெண், ‘`நான் அமுதேஸ்வரியின் அக்கா. நீ ஏமாற்றியதால் என் தங்கை தற்கொலை செய்து விட்டாள்’’ என கூறி உள்ளார். இதனால் அசோக்குமார் அதிர்ச்சியடைந்து மன்னிப்பு கேட்டுள்ளார். உடனே அந்த பெண், தான் தேனி வருவதாகவும், அப்போது மன்னிப்பு கேள் என கூறி உள்ளார். இதற்கு அசோக்குமாரும் சம்மதித்துள்ளார். இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் அந்த பெண் தேனிக்கு வந்து லாட்ஜ் ஒன்றில் தங்கி உள்ளார். அங்கு தான் தங்கியிருந்த லாட்ஜ்க்கு வருமாறு கூறி உள்ளார். அங்கு சென்ற அசோக்குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால், இறந்ததாக கூறிய அமுதேஸ்வரி உயிருடன் இருந்தார்.

அப்போது அந்த பெண், ‘`நீ என்னை ஏமாற்றி விட்டாய். என்னைக் கல்யாணம் செய்துகொள். இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்’’ என மிரட்டி உள்ளார். இதைகேட்டு அசோக்குமார் செய்வதறியாது திகைத்தார். பின்னர், அவரிடமிருந்து பேச்சுவாக்கில் லாட்ஜில் இருந்து வெளியேறி தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணின் உண்மையான பெயர் அமுதேஸ்வரி அல்ல என்பதும் விக்னேஸ்வரி என தெரிய வந்தது. பின்னர் இருதரப்பிலும் சமாதானமாக செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

ஆனால், 45 வயதான அந்த பெண்ணோ அசோக்குமார் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டில் இருந்த பெற்றோரிடம் அசோக்குமாரும் தானும் காதலித்ததாகவும் தங்களுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் என்றும் கேட்டுள்ளார். இதை பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், கோபமடைந்த அந்த பெண், வீரபாண்டி காவல் நிலையம் சென்றார். பின்னர், தன்னை ஏமாற்றிய அசோக்குமார் மீது வழக்குபதிவு செய்யவேண்டும் என்று புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்ததில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் இவர்கள் புகார் கொடுத்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் முதல்கட்டமாக அவரை சமாதானப்படுத்தும் விதமாக அசோக்குமார் மீது வழக்கு பதிந்தனர். இதன்பின், விக்னேஸ்வரி மலேசியா கிளம்பி சென்று விட்டார் என்று தெரிகிறது. எனினும், 2 முறை சமாதானம் செய்தும் விக்னேஸ்வரி மீண்டும் வந்துள்ளதால், ஏதேனும் ரகசிய திட்டம் தீட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதன்பின், போடியில் அந்த பெண் தங்கியிருந்த லாட்ஜை கண்காணிக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று, போடியில் உள்ள தனியார் லாட்ஜில் சந்தேகத்திற்கு இடமாக சிலர் நடமாடுவதாக போடி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் அங்கு சென்ற போலீசார், கூலிப்படை கும்பலான ராமநாதபுரத்தை சேர்ந்த கமுதி அன்பரசன் (24), மண்டலமாணிக்கத்தை சேர்ந்த முனியசாமி (21), அய்யனார்(30), திருமுருகன் (21), ஜோஸப்  பாண்டியன்குமார் (20), திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பாஸ்கரன் (47),  தேனி, அல்லிநகரம் யோகேஷ் (20), தினேஷ் (22), கார்த்திக் (20) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பட்டாக்கத்தி, இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விக்னேஸ்வரி பணம் கொடுத்து அசோக்குமாரை கொல்வதற்காக மேற்கண்ட கூலிப்படை கும்பலை அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட 9 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Love ,lover ,Malaysian ,Theni ,mercenary , Mercenary
× RELATED அமித் ஷா பேச்சு பற்றி போலி வீடியோ...