×

இலங்கை அதிபர் கோத்தபய இந்தியா வருகை: சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை

சென்னை: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்தியா வந்ததை கண்டித்து சென்னையில் நேற்று அந்த நாட்டு தூதரகத்தை 100க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த அதிபர் தேர்தலில், கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர் மோடி, இந்தியா வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட கோத்தபய ராஜபக்சே, அதிபராக தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு நேற்று வந்தார். 3 நாள் பயணமாக இந்தியா வந்த அவரை டெல்லி விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார். இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து நன்றி தெரிவித்தார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் கோத்தப ராஜபக்சேவை வரவேற்று அதிகாரிகளை அறிமுகப்படுத்தினர்.

கோத்தபய ராஜபக்சே, இலங்கையில் ராணுவ அமைச்சராக இருந்தபோதுதான் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதனால் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினார். இந்நிலையில் நேற்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அமைப்பினர் அழைப்பு விடுத்தனர். எனவே, துணை கமிஷனர் தர்மராஜ், உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

நேற்று பகல் 11.30 மணிக்கு பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் உமாபதி, சுகுமார் தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் நுங்கம்பாக்கம் இலங்கை தூதரகம் அருகே திரண்டனர். அவர்கள் தூதரகம் நோக்கி செல்ல முயன்றதும் போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் சுமார் 30 நிமிடத்துக்கு மேல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டம் நடத்தியதால், அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

கோத்தபய ராஜபக்சே உருவப்படம் எரிப்பு

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வருகையை கண்டித்து சென்னை பல்கலைக்கழகத்தில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று பிற்பகலில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். மாணவர்கள் அனைவரும் கருப்பு நிற சட்டை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், ராஜபக்சேவுக்கு எதிராக கோஷமிட்டனர். அவரது புகைப்படத்தை எரித்தனர். இதுதொடர்பாக மாணவர்கள் கூறுகையில், ‘‘கோத்தபய ராஜபக்சே இலங்கையில் தமிழர் இனப்படுகொலைக்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர். ஒரு போர்க்குற்றவாளிக்கு மத்திய அரசு வரவேற்பு அளிப்பது வேதனை அளிக்கிறது’’ என்றனர்.

Tags : Gotabhaya ,India ,Sri Lankan ,Chennai Embassy , Embassy of Sri Lanka
× RELATED இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஷூ வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை