×

அமமுகவை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் நிர்வாகி வா.புகழேந்தி தாக்கல் செய்துள்ள மனு: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி  தொடங்கியுள்ள டிடிவி.தினகரன், அக்கட்சியை பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்துடன் பிரமாண பத்திரம் அளித்த 14 பேர் தற்போது கட்சியில் இருந்து விலகி விட்டனர். இந்நிலையில் அந்த பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் கட்சியை பதிவு செய்வது விதிகளுக்கு முரணானது.

தேர்தல் ஆணைய விதிப்படி ஒரு கட்சியை பதிவு செய்ய  அக்கட்சியின் சார்பில் 100 தனி நபர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விதிமுறையின் அடிப்படையில் நான் உட்பட மொத்தம் 100 பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்  செய்தோம்.

டிடிவி.தினகரன் கட்சியின் பொதுக்குழுவை இதுவரை கூட்டாமல் தனது விருப்பப்படி கட்சிக்கு நிர்வாகிகளை நியமித்துள்ளார். பொதுச்செயலாளராகவும் தன்னை அறிவித்துக்கொண்டார். கட்சியின் உட்கட்சி விதிமுறைகள் எதுவும் உருவாக்கப்படாதது, பொதுக்குழுவை கூட்டாமல் இருப்பது குறித்து எதிர்ப்பு தெரிவித்தேன். அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இதற்கிடையே எந்த விதிகளையும் பின்பற்றாமல் கடந்த ஜூலை 4ம் தேதி பொதுக்குழுவை கூட்டினார். கட்சி நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் பொதுக்குழு குறித்து தகவல் தெரிவிக்கவில்லை.

தற்போது டிடிவி.தினகரனின் நடவடிக்கையில் உடன்பாடின்றி, நானும், முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலரும் அமமுகவில் இருந்து விலகி விட்டோம். உள்கட்சி தேர்தலுக்காக தற்போது கட்சியை பதிவு செய்யும் நடவடிக்கையில் டிடிவி.தினகரன் தீவிரமாக இறங்கியுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளுக்கு முரணாக கட்சியை பதிவு செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு கடந்த அக்டோபர் 23ம் தேதி மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டவில்லை.

எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளுக்கு முரணாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை பதிவு செய்ய தடை விதித்து உத்தரவிட வேண்டும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை பதிவு செய்யக்கோரும் விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Election Commission ,UPA , AMMK
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...