×

போலி ஆவணம் மூலம் வங்கியில் 15 லட்சம் கடன் மோசடி ஆசாமிக்கு 3 ஆண்டு சிறை : சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வங்கியில் போலி ஆவணங்கள் கொடுத்து 15 லட்சம் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்தவர் வி.கோபாலகிருஷ்ணன். இவர் கடந்த 2002ம் ஆண்டு தொழில் நிறுவனம் நடத்தி வருவதாக போலி ஆவணங்களை கொடுத்து, ராயபுரம் இந்தியன் வங்கியில் 15 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்த மோசடிக்கு அப்போதைய வங்கி மேலாளரும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த மோசடி குறித்து சிபிஐ அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்படி வங்கி மேலாளர் ரவீந்திரன், வி.கோபாலகிருஷ்ணன், சாட்சி கையெழுத்திட்ட சுரேஷ், சம்பத் என மொத்தம் 4 பேர் மீது கடந்த 2005ம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் வி.கோபாலகிருஷ்ணன் தலைமறைவானார். இதனால் வங்கி ரவிந்திரன் மற்றும் சாட்சி கையெழுத்திட்ட சுரேஷ், சம்பத் மீதான வழக்கு தனியாக நடந்தது. கடந்த 2013ம் ஆண்டு வங்கி மேலாளர் உள்பட 3 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில் தலைமறைவாக இருந்த வி.கோபாலகிருஷ்ணன் வழக்கு விசாரணைக்காக ஆஜரானார். அவர் மீதான வழக்கு விசாரணை நீதிபதி ஜவகர் முன்னிலையில் நடந்து வந்தது. சி.பி.ஐ. தரப்பில் மூத்த வக்கீல் எம்.வி.தினகர் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட வி.கோபாலகிருஷ்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், வங்கிக்கு 20 லட்சம் இழப்பீடாக 3 மாதத்துக்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் வங்கி நிர்வாகம் வி.கோபாலகிருஷ்ணன் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டார்.

Tags : Assamese ,jail , 15-year-old Assami sentenced ,3 years in jail...
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!