தங்களுக்கு இடையூறாக இருப்பதாக கருதி சிசிடிவி கேமராவை உடைத்த சிறுவன் உட்பட 7 பேர் கைது

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி மங்களபுரம், சந்திரயோகி சமாதி தெருவில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் போலீசார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சிசிடிவி கேமராக்கள் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக கருதிய சிலர், அந்த தெருவில் பொருத்தப்பட்டு இருந்த 7 சிசிடிவி கேமராக்களையும் சமீபத்தில் அடித்து உடைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஓட்டேரி போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் வள்ளி, எஸ்ஐ சஜிபா ஆகியோர் சிசிடிவி கேமரா உடைப்பதற்கு முன், அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், மங்களபுரம் பகுதியை சேர்ந்த நவீன் (28), செல்வராஜ் (21), சஞ்சய்குமார் (20), அஜய்குமார் (20), சந்தோஷ் (19) மற்றும் அயனாவரம் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் ஆகியோர் சிசிடிவி கேமராக்களை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 பேரை சிறையில் அடைத்தனர். 2 சிறுவர்களை சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

Tags : even arrested, including a boy , broke a CCTV camera
× RELATED மது அருந்த இடையூறாக இருந்ததால் சிசிடிவி கேமராவை உடைத்த 4 பேர் கைது