×

புளியந்தோப்பு பகுதியில் மாட்டு தொழுவமான கழிப்பறை : பொதுமக்கள் தவிப்பு

பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் உள்ள மாநகராட்சி இலவச கழிப்பறை மாட்டு தொழுவமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சென்னையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆங்காங்கே மாநகராட்சி சார்பில் பொது கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றை முறையாக பராமரிக்காததால் பல இடங்களில் தண்ணீர் இன்றியும், கழிவுநீர் தொட்டி நிரம்பி வழிந்தும், உபகரணங்கள் உடைந்து மிகவும் மோசமான நிலையிலும் உள்ளன. இதனால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பல இடங்களில், முன்னாள் கவுன்சிலர்கள் இந்த பொது கழிவறைகளுக்கு ஆட்களை நியமித்து கட்டணம் வசூலித்து வருகின்றனர். குறிப்பாக, வடசென்னை பகுதிகளில் உள்ள பெரும்பாலான மாநகராட்சி இலவச கழிவறைகளில் சிலர் பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதை கண்கூடாக காணமுடிகிறது. இதனால், பொதுமக்கள் சிறுநீர் கழிக்க திறந்தவெளியை நாடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. சில இடங்களில் இந்த இலவச கழிவறை மாட்டுத் தொழுவமாகவும், குடோன்களாகவும், கஞ்சா புகைக்கும் இடமாகவும் மாறியுள்ளன.

சென்னை மாநகராட்சி 6வது மண்டலம் 73வது வார்டுக்கு உட்பட்ட புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலை டிகாஸ்டர் ரோடு சந்திப்பில் மாநகராட்சி சார்பில், பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இலவச கழிவறை தற்போது பயன்பாடின்றி மூடிக்கிடக்கிறது. பாழடைந்துள்ள இந்த கட்டிடத்தின் வெளியே அங்குள்ள சிலர் மாடுகளை கட்டி வைத்துள்ளனர். இதன் கழிவுகள் அங்கேயே தேங்குவதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கஞ்சா புகைப்பதற்கும் இந்த கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் இந்த கழிவறையை பயன்படுத்துவதில்லை.

இந்த கழிவறை அருகில், ஆடுதொட்டி அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வந்து செல்கின்றனர். மேலும் புளியந்தோப்பு காவல் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களும் இதன் அருகில் உள்ளன. மேற்கண்ட இடங்களுக்கு வரும் பொதுமக்கள் இந்த இலவச கழிவறையை பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், சிதிலமடைந்து மாட்டுத் தொழுவமாக மாறி, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி இந்த இலவச கழிப்பறையை சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Cow Toilet Toilet Area ,Puliyanthoppa Puliyanthoppa , Cow Toilet,Puliyanthoppa
× RELATED புளியந்தோப்பு பகுதியில் மாட்டு தொழுவமான கழிப்பறை : பொதுமக்கள் தவிப்பு