காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற இளம்பெண் மரணம் மருத்துவர் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் திடீர் சாலை மறியல்

பல்லாவரம்: குன்றத்தூர் அடுத்த தரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த சிவகுமார்-அற்புதமேரி தம்பதியின் மகள் நித்யா (எ) நிதியா (21). பட்டதாரியான நிதியா கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவரை சிகிச்சைக்காக அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சைக்காக ஊசி போட்ட சில மணி நேரத்தில் நிதியா உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், மருத்துவர் தவறான சிகிச்சை அளித்ததால் தான் நிதியா உயிரிழந்தார். எனவே, சம்மந்தப்பட்ட மருத்துவர்  மீது நடவடிக்கை எடுக்க கோரி, உறவினர்கள் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

ஆனால், 3 நாட்களாகியும் மருத்துவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, நிதியாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று அனகாபுத்தூர் பேருந்து நிலையம் எதிரே பல்லாவரம் - குன்றத்தூர் பிரதான சாலையில் திடீர்  மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கர் நகர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் நிதியாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு, உண்மையாகவே மருத்துவர் மீது தவறு இருந்தால் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories:

>