×

வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையே ஏப்ரல் மாதம் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை: வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் சோதனை ஓட்டம் நடைபெறும் என மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தற்போது 45.1 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் முதல் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் நீட்டிப்பான வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.1 கி.மீ தூரத்தில் மெட்ரோ ரயில் பணிகள் ரூ.3 ஆயிரத்து 770 கோடியில் நடைபெற்று வருகிறது. இவ்வழித்தடத்தில் மொத்தம் 9 ரயில் நிலையங்கள் அமைய உள்ளது. இதில், சர் தியாகராயர் கல்லூரி, கொருக்குப்பேட்டை நிலையங்கள் மட்டும் சுரங்கப்பாதையில் அமைய உள்ளது. நீட்டிப்பு பணிகளை விரைவில் முடிக்கும் வகையில் அதிநவீன கட்டுமான இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தநிலையில், இப்பணியை பிப்ரவரி மாததிற்குள் முடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 2020 பிப்ரவரி மாதம் பணிகளை முடித்து ஏப்ரல் மாதம் இவ்வழித்தடத்தில் சோதனை ஓட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. பின்னர், ஜூன் மாதம் வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் சேவையை  தொடங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையே தற்போது 80 சதவீத பணிகள் முடிந்துள்ளது. இவ்வழித்தடத்தில் 2020 ஏப்ரல் மாதம் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. மேலும், இந்த வழித்தடத்தில் அமைய உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்போது உள்ள நிலையங்கள் போல் பெரியதாக இருக்காது. அனைத்து வசதிகளும் அடங்கிய சிறிய அளவிலான மெட்ரோ ரயில் நிலையங்களாகவே இருக்கும். தற்போது, மெட்ரோ ரயில் முதல் திட்டத்தில் 42 மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. விம்கோ நகர் வரை நீட்டிப்பு வழித்தடத்திற்கு கூடுதலாக 10 புதிய மெட்ரோ ரயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக, விம்கோ நகரில் புதிய டெப்போ ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த ரயில் பெட்டிகள் ஆந்திராவில் உள்ள சிட்டியில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றது. புதிய மெட்ரோ ரயில் பெட்டிகள் தரப்பரிசோதனைக்கு பிறகு சென்னை கொண்டுவரப்பட உள்ளது. இவ்வாறு கூறினார்.

Tags : Metro Rail ,test run ,Washermenpet - Vimco Nagar , Metro Rail, test run ,April
× RELATED மெட்ரோ ரயில் பணி காரணமாக ஓ.எம்.ஆர்...