×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சுவாமி உற்சவ மூர்த்தி சிலைகள் தேய்மானம் : ஆர்ஜித சேவைகள் நிறுத்தம்?

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சுவாமி உற்சவ மூர்த்தி சிலைகள் தேய்மானம் அடைந்துள்ளதால் ஆர்ஜித சேவைகளை நிறுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, வசந்த உற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம் என்று தினந்தோறும் ஆர்ஜித சேவைகளும் வாராந்திர  நாட்களில் விசேஷ பூஜை, சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் வருடாந்திர சேவைகள் என  பல்வேறு சேவைகள் நடைபெற்று வருகிறது. இந்த சேவைகளின்போது உற்சவ மூர்த்திகளான தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு தண்ணீராலும் பல்வேறு திரவியங்களாலும் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனால் 600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த உற்சவர் சிலைகளில் தற்போது தேய்மானம் ஏற்பட்டுள்ளது.

மேலும் சிலையின் பல இடங்களில் விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் சுவாமி சிலைகள் சேதம் அடையும் நிலை ஏற்படும் இதை தவிர்ப்பதற்காக ஆர்ஜித சேவைகளை ரத்து  செய்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடத்த செய்ய வேண்டும் என ஆகம ஆலோசகர்கள் தேவஸ்தான அறங்காவலர் குழுவிற்கும் அதிகாரிகளுக்கும் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே இந்த சேவைகளுக்கான கோட்டா ஆன்லைன் மூலம் மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு பக்தர்கள் டிக்கெட் பெற்றுள்ள நிலையில் ஆர்ஜித சேவைகளை ரத்து செய்வதா அல்லது மாற்று ஏற்பாடாக  என்ன செய்வது என்பது குறித்து விரைவில் நடைபெறக்கூடிய அறங்காவலர் குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

‘ஆலோசித்து முடிவு’

உற்சவ மூர்த்தி சிலைகள் தேய்மானம் மற்றும் ஆர்ஜித சேவை ரத்து செய்யப்படலாம் என்பன போன்ற கேள்விகளுக்கு அறங்காவலர் தலைவர் சுப்பாரெட்டி நிருபர்களிடம் பதில் கூறுகையில், ஆர்ஜித சேவையை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஏழுமலையான் கோயிலில் வழக்கம்போல் ஆர்ஜித சேவைகள் நடக்கும். சுவாமி சிலை தேய்மானம் குறித்து ஆகம ஆலோசகர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

Tags : Malayappa Swamy ,Tirupati Ezumalayan Temple Statues ,Tirupati Ezumalayan Temple ,Malayappa Swami Utsava Murthy , statues of Malayappa Swami, Utsava Murthy ,Tirupati Ezumalayan temple
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத...